மதிமுகவின் மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது, அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியலில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, “கருணாநிதி வாரிசு அரசியல் செய்கிறார்” என்கிற மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து, மிக கடுமையான விமர்சனத்தை முன் வைத்து புதிய கட்சியைத் தொடங்கிய வைகோவின் கட்சியில், தற்போது அவரது மகனுக்கு திடீரென்று பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது தமிழக அரசியல் களத்தில் பல விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. 

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னை எழும்பூர் கட்சி அலுவலகத்தில நடைபெற்றது. அதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும், அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் வைகோவின் மகனானா துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்து கொள்ளவில்லை என்றும், கூறப்பட்டது. 

ஆனாலும், இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 

அதில், வைகோ உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் வாக்களித்தனர். ஆக மொத்தமாக, இதில் 106 வாக்குகளில் 104 பேர் துரை வையாபுரிக்கு பதவி வழங்கவேண்டும் என்று வாக்களித்தனர். அதனையடுத்து, துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 

அதனையடுத்து, வைகோ வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்த சூழலில் தான், மதிமுக கட்சியின் இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், அக்கட்சியிலிருந்து விலகுவதாக தற்போது அறிவித்து உள்ளார்.

இது குறித்து மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈசுவரன் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வந்தேன் என்றும், கட்சி இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றி உள்ளேன்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “எனது வாழ்நாளில் என் மனதில் நினைக்கும் பல அரசியல், சமூக மாற்றங்களை உருவாக்க நான் சிறு முயற்சியாவது மேற்க்கொள்ள வேண்டும் என கருதுகிறேன் என்றும், எனது சட்டப்போராட்டங்களை தொடரவும், மக்கள் பணிகளை தொடரவும் எனக்கு சிறு அமைப்பாவது தேவைப்படுகிறது” என்றும் குறிப்பிட்டு பேசினார். 

“அதனால் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்க உள்ளேன் என்றும், இது அரசியல் இயக்கமல்ல என்றாலும், அரசியலை தூய்மைப்படுத்தவும் பயன்படும்” என்றும் சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக, “நான் நேசிக்கும் தலைவர் வைகோ என் உள்ளத்தில் பல அடிப்படை கொள்கைகளை விதைத்து விட்டார் என்றும், அது இன்று மரமாகிவிட்டது என்றாலும், அதை என்னால் வெட்ட இயலவில்லை என்றும், எந்த காரணம் சொல்லியும் என்னால் சமாதானப்படுத்திக்கொள்ள இயலவில்லை” என்றும், கூறியுள்ளார்.

முக்கியமாக, “என் தலைவரா? அவர் விதைத்த கொள்கையா? என்ற போராட்டத்தில் அவரின் கொள்கையே என்னை ஆட்கொண்டுவிட்டது என்றும், என்ன செய்வேன் நான்?” என்றும், அவர் தன்னை தானே கேள்வி எழுப்பி உள்ளார்.

“அரசியலில் எனக்கு நேர்மையையும் கண்ணியத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் கற்றுத்தந்த எனது பாசமிகு பொதுச் செயலாளருக்கும், எனக்கு ஒத்துழைப்பு தந்து எனது போராட்டத்தை வெற்றியடைய செய்தும், என் மீது அன்பு செலுத்திய எனது சக தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது என்றும், எதை பொதுச் செயலாளர் சொன்னாரோ அது நடப்பதற்கு முன்பே அமைதியாக சென்றுவிட நினைத்து கடிதம் எழுதினேன் என்றும், ஆனால் பொதுச்செயலாளரின் காந்தக்குரல் என்னை கட்டிப்போட்டு விட்டது” என்றும், கூறியுள்ளார்.

“ஆனால் இன்று கனத்த இதயத்தோடு இமைப்பொழுதும் என்னை நீங்கா என் தலைவரின் இயக்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்” என்றும், அவர் தெரிவித்துள்ளார். 

மிக முக்கியமாக, “அவருக்கே தெரியாமல் பல காரியங்கள் நடக்கும் போது என்னுடைய வேதனையை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை என்றும், கருத்து வேறுபாடு வந்த பின்னர் ஒரு கட்சியில் தொடர்ந்து பயணிப்பது சரியாக இருக்காது என்று தான், நான் கட்சியில் இருந்து வெளியேறி இருப்பதாகவும்” அவர் வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார்.