சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் திமுகவில் இணைந்தார். 


கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார் மதிவாணன். 


திமுகாவில் இணைந்த பின்பு அவர் தெரிவித்தது ,’’ தேமுதிக கட்சியில் நடைபெறக் கூடிய எந்த ஒரு செயல்பாடும் கட்சித் தலைவரான விஜயகாந்திற்கு தெரிந்து நடக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில், தேமுதிக கட்சி ஒரு குடும்ப கட்சியாகவே மாறி விட்டது. தேமுதிக தொடங்கப்பட்ட நோக்கம் இப்போது இல்லை. அக்கட்சி திசை மாறி சென்றுக்கொண்டு இருக்கிறது. அதனால் தான் அக்கட்சியில் இருந்து விலகி விட்டேன். 


நாட்டின் பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கூடிய கோரிக்கையை கூட்டணிக்காக முன் வைக்காமல், 41 சீட் கொடுத்தால் மட்டும் கூட்டணி வைப்போம் என்கிறார்கள். இதனால் நான் மட்டும் இல்லை. மற்ற தேமுதிக நிர்வாகிகளும் கடும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். நான் திமுகவில் இணைந்திருப்பது ஒரு தொடக்கம் தான். இனி வரும் நாட்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவில் சேர இருக்கிறார்கள்.