விஜய் சேதுபதியை விமர்சித்த நடிகை காயத்ரி ரகுராம்!
By Aruvi | Galatta | 06:04 PM

“மாஸ்டர்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியதற்கு, நடிகை காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் “மாஸ்டர்” படத்தின் இசை வெளியிட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “கொரோனா வைரசிடமிருந்து பாதுகாப்பாக இருக்க மன வலிமை வேண்டும். மனிதனைக் காப்பாற்ற மனிதன் தான் வருவான். கடவுள் வரமாட்டார். கொரோனா வந்தால், உறவினர்களே தொட அச்சப்படும் தருணத்தில், நம்மைப் பாதுகாக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் தான். அவர்களுக்கு நன்றி” என்று கொரோனா குறித்தும், மனிதம் குறித்தும் அசத்தலாகப் பேசினார்.
தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, “கடவுள் மேல இருக்காரு, மனிதன் தான் பூமியில் இருக்கான். மனிதன் தான், மனிதனை காப்பாற்ற முடியும். இது மனிதன் வாழ்வதற்கான இடம். சகோதரத்துவத்தோடு சந்தோஷமாக அன்பைப் பரிமாறிக்கொண்டு வாழவேண்டும். உங்களிடம் யாராவது மதம் குறித்துப் பேசினால், அவர்களுக்கு மனிதத்தையும் மனித நேயத்தையும் சொல்லிக்கொடுங்கள்” என்று சட்டையடியாக பேசி அனைவரின் கைத்தட்டலையும் பெற்றார்.
இதனையடுத்து “மாஸ்டர்” படத்தின் இசை வெளியிட்டு விழா முடிவதற்குள், நடிகர் விஜய் சேதுபதி “மதம், மனிதம்” குறித்துப் பேசியது, இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் கருத்தை விமர்சித்து நடிகை காயத்ரி ரகுராம் டிவிட் செய்துள்ளார். அதில், “மற்றொரு மனிதனை நம்புவதற்கு வாழ்த்துக்கள் நண்பா. எந்த நம்பிக்கைகளையும் அழிக்க முடியாது. கோடிக்கணக்கான விசுவாசிகள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஊமை என்று நீங்கள் நினைத்து, பொய் சொல்லவும் வெறுக்கவும் கூடிய மற்றொரு மனிதனை நீங்கள் நம்பியதற்காக வருந்துகிறேன். இந்த வாழ்க்கை கடவுளால் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஒரு டிவிட் செய்து, அதில், “இன்றைய உலகில், வேறொரு மனிதர் உங்களை உயர்த்த உதவுவார், உங்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியாக இருப்பார் என்பது ஒரு ஜோக்” என்றும் நடிகை காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.
இதற்கு, பல்வேறு தரப்பினரும் இணையத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும், விமர்சனம் செய்தும் வருகின்றனர்.