சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம், கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வருக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளது.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கொரோனாவின் 2 ஆம் அலையானது மிக தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை தமிழகம் முழுவதும் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன், மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட தமிழக அரசிற்கு, நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இதனை சமாளிக்கும் விதமாக, “முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, சிறுவர் சிறுமியர்கள் முதல் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவிற்கு தமிழக அரசுக்கு நிதியுதவி அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில், கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வருக்கு 50 லட்சம் ரூபாயை, சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது. 

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகமானது, தமிழகத்தின் புகழ் பெற்ற ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறது. சமூகம் மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் மற்றும் பல்கலைக்கழகத்தின் தலைவர் மேரி ஜான்சன் ஆகியோர் சேர்ந்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 

இந்த சந்திப்பின்போது, “கொரோனா நிவாரண நிதியாக, சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் 50 லட்சம் ரூபாயை தமிழக முதலமைச்சரிடம் அவர்கள் வழங்கினார்கள். 

அப்போது, தமிழக மக்களுக்காக நிவாரண நிதியை வழங்கிய சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, தமிழக அரசுக்கு தமிழகத்தின் சிறுவர் சிறுமியர்கள் மற்றும் நடிகர் சூர்யா குடும்பத்தினர் இது வரை நிவாரண நிதி அளித்து வந்த நிலையில், தமிழகத்தின் முதல் நிறுவனமாக சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கி, மற்ற நிறுவனங்களும் நிவாரண நிதி வழங்க நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.