திண்டுக்கல் அருகே கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா என்னும் உயிர் கொல்லி நோய், தமிழகம் உட்பட உலகம் முழுவதும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில், கொரோனா என்னும் கொடிய வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

இதன் காரணமாக, ஒவ்வொரு ஊரிலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிராமங்கள் தொடங்கி, நகர் பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும், மாவட்ட நிர்வாகம் சார்பாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

அதன் படி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகச் சிலர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். இதில், அந்த பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிக்குச் சேர்ந்து பணியாற்றி வந்தார். 

இதனிடையே, இன்று அங்குள்ள மேல மந்தை பகுதியில், வீடு வீடாகச் சென்று சக்தி வேல் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் ஒரு வீட்டில் கிருமி நாசினி தெளித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு வீட்டில் சிறுமி ஒருவர் தனியாக இருந்துள்ளார். அங்கு, 

பெயரிவர்கள் யாரும் இல்லாத சூழலில், சிறுமி மட்டும் தனியாக இருப்பதை அவர் பார்த்துள்ளார். இதனையடுத்து, அந்த வீட்டிற்குள் நுழைந்த சக்திவேல், உள்ளே சென்று பார்த்தபோது, அந்த சிறுமி மன வளர்ச்சி குன்றியவர் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, தனியாக இருந்த சிறுமியிடம், சக்தி வேல் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

அப்போது, சிறுமியோ வலி பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு அழுது துடித்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனால், சக்தி வேல் அங்கிருந்து தப்பி ஓட உள்ளார். இதனையடுத்து, உள்ளே சென்று பார்த்து சிறுமியிடம் விசாரித்த போது, அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. 

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்ததுள்ளனர். அவர்கள் வந்து பார்த்துவிட்டு, இது குறித்து வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சக்தி வேலை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரை சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, ஊரே கொரோனாவுக்கு அஞ்சி வீட்டில் முடங்கி உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நபர்கள், அத்துமீறி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து வீடுகளில் இருந்தபடியே, புதுச்சேரியில் மாணவிகள் போராட்டம் நடத்தியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா காரணமாக, ஊரே அவரவர் வீடுகளில் தஞ்சம் அடைந்திருந்தாலும், சில பகுதிகளில் குற்றச் செயல்கள் குறைந்தபாடு இல்லை. கொரோனா காலத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன் முறைகள், நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இதனைக் கண்டிக்கும் விதமாக, இந்திய மாணவர் சங்கத்தின் மாணவிகள் பிரிவினர், அவரவர் தங்கள் வீடுகளில் இருந்த படியே விழிப்புணர்வு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதில் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள், தங்கள் வீடுகளின் முன்பு கோரிக்கை பதாகைகளை ஏந்திய படியே விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகள் ஏந்தி நின்ற கோரிக்கை பதாகையில், “பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்றும், மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.