கொரோனா மட்டுமின்றி, வெட்டுக்கிளி தாக்குதல், புயல் போன்ற சவால்களுடனும் இந்தியா போராடிக்கொண்டிருப்பதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபையின் 95 வது ஆண்டு தின விழாவில், காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, “கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் போராடி வருவதாக” குறிப்பிட்டார்.

India struggles with grasshopper, storm  and Corona - PM

மேலும், “உலகமே கொரோனாவிற்கு எதிராகப் போராடி வரும் நிலையில், இந்தியா மட்டும் கொரோனாவுடன் இணைந்து வெட்டுக்கிளி தாக்குதல், புயல் சீற்றம், சிறிய பூகம்பம், அசாம் தீ விபத்து என பலவற்றுடன் தொடர்ந்து போராடி வருகிறது” என்றும் பிரதமர் மோடி கூறினார்.

“இது போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம் நமக்கு புதிய நம்பிக்கையைத் தருகிறது என்றும், பல்வேறு சவால்களுக்கு இடையில் பணியாற்றுபவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்” என்றும் பிரதமர் மோடி உற்சாகம் மூட்டினார்.

அத்துடன், “நமக்கு ஒற்றுமையும், வலிமையும் தான் அந்த சவால்களை சந்திப்பதற்கான உற்சாக மருந்து” என்றும், தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

அதேபோல், “கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்றும், சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம்” என்றும் பிரதமர் மோடி சூளுரைத்தார்.

குறிப்பாக, “கிழக்கு மற்றும் வட கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்திய வர்த்தக சபையின் பங்கு மிக முக்கியமானது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.