“இபாஸ் வழங்க லஞ்சம் பெறுவது என்பது ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல ஊழல் செய்கின்றனர்” என்று, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு குறிப்பிட்ட தனியார் நூற்பாலையில் சட்ட விரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த 
8 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை மீட்க கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் கட்சித் தலைவர் சி.எம்.சிவபாபு தொடர்ந்த வழக்கானது நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இ பாஸ் இல்லாமல், மாணவிகள் பலரும் அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இதற்கு, கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், “இபாஸ் கேட்டு முறையாக விண்ணப்பித்தவர்களால், இபாஸ் பெற இயலாத நிலையில், புரோக்கர்கள் மூலம் 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று சில அதிகாரிகள், இ பாஸ்கள் வழங்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக” சுட்டிக்காட்டினார்.

“இப்படிப்பட்ட நெருக்கடியான கொரோனா காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் செய்யும் அரசு ஊழியர்களுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், தமிழக அரசுக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். 

அத்துடன், “நூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளைக் குழந்தைகள் நலக் குழுக்கள் மூலம் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றும், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் “திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா? என கண்காணிக்க திடீர் சோதனைகள் நடத்த காவல் துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுக்களுக்கும்” நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். 

இதனையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

அதே நேரத்தில், “ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து எளிதாக இபாஸ் பெறலாம்” என்று, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “கொரோனா வைரசில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகும் சதவிகிதம் தற்போது 87.05 சதவீதமாக அதிகரித்துள்ளதாக” குறிப்பிட்டார். 

மேலும், “சென்னையில் தொடக்கத்தில் இருந்ததை விட, அதன் பிறகு கொரோனா வைரஸ் தொற்று குறைவதற்கு மக்களின் ஒத்துழைப்பே காரணம் என்றும், சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு களப்பணிகள் 3 அல்லது 4 மாதங்களுக்கு மேலும் தொடரும்” என்றும், அவர் தெரிவித்தார். 

குறிப்பாக, “ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து பொது மக்கள் எளிதாக இபாஸ் பெறலாம் என்றும், புரோக்கர்கள், தனி நபர்களை பொது மக்கள் இது தொடர்பாக நாட வேண்டாம்” என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டார்.