ஹெ.ச்.டி.எப்.சி வங்கியின் டிஜிட்டல் சேவைகள் யாவும், நவம்பர் 21 மாலை முதல் நவம்பர் 22 காலை வரை சுமார் 12 மணிநேரம் முழுமையாக முடங்கியது. இதனால் ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்நேரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவை தடைப்பட்டதற்கான காரணத்தைக் கேட்டிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் இவ்வங்கியின் பிரைமரி டேட்டா சென்டரில் ஏற்பட்ட மின்சாரப் பாதிப்பு தான் என்று வங்கி நிர்வாகம் ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது `இனி ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளைக் விநியோகிக்கக்கூடாது' என ரிசர்வ் வங்கி, ஹெச்.டி.எப்.சி.க்கு தற்காலிக தடையை விதித்துள்ளது. உடன் டிஜிட்டல் 2.0 திட்டத்தில் இருக்கும் புதிய டிஜிட்டல் திட்டங்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவும், ஐடி சேவைகள் மூலம் வர்த்தகம் ஈட்டும் இதர முயற்சிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

சேவை முடக்கம் ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்குள் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் காா்டு மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு யாரும் எதிா்பாராத வகையில் ரிசா்வ் வங்கி தடைவிதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சசிதா் ஜெகதீஷன் வங்கியின் வலைதளத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், ‘‘ சில நேரங்களில் வாடிக்கையாளா்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யும் அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதற்காக வருந்துகிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்.

ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவை வர்த்தகத்திற்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹெச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டு விநியோகத்தைத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது, சக போட்டி நிறுவனங்களுக்குத் தற்போது பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. ரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தொடர்ந்து ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம் டிஜிட்டல் வர்த்தகம் தடைப்பெற்றதற்கு என்ன காரணம், அதை எப்படிச் சரி செய்வது என்பதை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்த பின்பு ரிசர்வ் வங்கி ஒப்புதலின் அடிப்படையில் தற்போது அறிவிக்கப்பட்ட அனைத்து தடைகளையும் முழுமையாக நீக்க ரிசர்வ் வங்கி தயார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆனால் ரிசர்வ் வங்கி கடந்த 2 வருடத்தில் ஹெச்டிஎப்சி வங்கியின் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், பேமெண்ட் சேவையில் ஏற்பட்ட பல தடை மற்றும் தொழில்நுட்ப கோளாறு அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. நவம்பர் 21ஆம் தேதி டிஜிட்டல் சேவை தடைப்பெற்றதற்கு முக்கியக் காரணம் பேமெண்ட் அளவீட்டை வங்கி நிர்வாகம் சரியாகக் கவனிக்காத காரணத்தினால் போதுமான capacity இல்லாத காரணத்தால் சேவை தடைப்பட்டு உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேநேரத்தில் ஹெச்டிஎப்சி வங்கி மீது சைபர் அட்டாக் நடந்துள்ளது எனச் செய்தியும் சமூகவலைதளங்களில் வெளியானது. ஆனால் அதை முற்றிலும் பொய் என விளக்கம் அளித்துள்ளது வங்கி நிர்வாகம்.