கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதால், அந்த மாவட்ட மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நல்லூரை சேர்ந்த 67 வயதான முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 67 வயது முதியவர், வியாபார நிமிர்த்தமாக ஆந்திராவுக்குச் சென்று திரும்பிய நிலையில், அவர் காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

First Corona Positive case in krishangiri

இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை, கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவநலப் பணிகள் இணை இயக்குனர் கோவிந்தன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த முதியவர் சேலம் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதன் மூலம், இந்த முதியவரே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி என்ற, பெயரையும் பெற்றுள்ளார்.

First Corona Positive case in krishangiri

இதனால், மத்திய அரசு அறிவித்த கொரோனா அட்டவணைப் பட்டியலில், தமிழ்நாட்டின் ஒரே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், தற்போது ஆரஞ்சு நிற மண்டலமாக மாறியுள்ளது. இதனால், அந்த மாவட்ட மக்கள் சோகமடைந்துள்ளனர்.

இதனிடையே, தேனி மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பியதன் மூலம், தேனி மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. 

தேனியில் 43 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், தேனி மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.