அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருக்கிறார். 

அதில், ``ஆழமாய் வேர் விட்டு ஆயிரமாயிரம் கிளைகள் பரப்பி, பூத்து குலுங்குகிற இந்த பொன்மனத்து இயக்கத்தின் சார்பில் 2021-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் வேட்பாளராக உங்கள் அனைவரின் ஆசிகளோடு ஒருமித்த கருத்தால் நான் அறிவிக்கப்பட்டு இருக்கிறேன். உழவின் வீட்டில் உதித்த ஒருவனும், உழைத்தால் முதல்வராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிமைச் சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்தி இருக்கிறது" என்று அவர் கூறியிருக்கிறார்.

``இதற்காக என் ஆயுளின் கடைசி விநாடி வரை இந்த இயக்கத்துக்கு நான் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன். எண்ணியது செய்திடல் வேண்டும், எதிலும் புண்ணியமே நிறைந்திட வேண்டும், நீதிக்கு தலைவணங்கி நடக்கவேண்டும், நினைத்ததெல்லாம் முடிக்கவேண்டும் என்னும் உயரிய லட்சியங்களை உள்ளத்தில் கொண்டு, எம்.ஜி.ஆர் தன் உதிரத்தின் ஈரத்தில் விதையூன்றிய இயக்கத்தில் ஒரு கடைக்கோடி தொண்டனாக அன்று என் அரசியல் வாழ்வை தொடங்கிய இந்த விவசாயியை, ஊர் நின்று பார்க்கும் அளவுக்கு உச்சத்துக்கு அழைத்து வந்தது, நான் தினந்தோறும் பூஜித்து வணங்கும் ஜெயலலிதா கனிவுக் கரங்கள்.

அந்த தெய்வத்தாய், எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆனாலும் கழகம்தான் தமிழகத்தை ஆளும் என புனிதமிக்க சட்டப்பேரவையில் தன் கடைசி சூளுரையாய் விடுத்துப் போன சபதத்தை முன்னெடுத்து நிறைவேற்றி முடிப்பதற்கு என்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கும் கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், தலைமை கழக நிர்வாகிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

’தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே’ என்னும் பொன்மொழிகளை மனதில் ஏற்று தினம் பாடுவோம். 2021-ம் ஆண்டிலும் ஜெயலலிதாவின் லட்சிய அரசை புனித ஜார்ஜ் கோட்டையிலே மீண்டும் படைப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்டிருக்கும் அவர், ``பழி பாவங்களுக்கு அஞ்சுபவனாக, கழகத்தின் பெருமைக்கும் புகழுக்கும் மட்டுமே ஆசைப்படுபவனாக உங்கள் அன்புச் சகோதரனாக நான் உழைத்து வருகிறேன். இந்தக் கழகம் என்னைப்போன்ற லட்சோப லட்சம் எளியோருக்கெல்லாம் பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை தந்த பாசப் போராட்டம்.

இங்கே, அப்பனுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன், பேரனுக்குப் பின் கொள்ளு பேரன் என்கிற வம்சாவளி அரசியல் கிடையாது. உழைப்பவர் உயர்ந்தவர் என்பதை போதித்த புரட்சி தலைவரின் வழிநடக்கும் கழகத்தில் உழைத்தால் உயர முடியும் என்பதற்கு நானும் ஒரு சாட்சி

எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களின் உண்மைத்தன்மையை உரசிப் பார்த்து அவற்றில் உள்ள ஆக்கப்பூர்வங்களை நாம் ஏற்றுக் கொள்பவர்கள். அதேநேரம் வழிசொல்ல மாட்டோம், பழி மட்டுமே சொல்லுவோம் என்கிற உள்நோக்கத்திலான காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டுகளை நாம் கடந்து செல்பவர்கள்

நமது இலக்கும் நமது லட்சியமும் மக்களின் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் மட்டுமே உரியது. இதனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உழைக்கும் நம்மை தமிழக மக்கள் உளமாற ஆதரிக்கிறார்கள். நாளையும் ஆதரிப்பார்கள்" என்று கூறியிருக்கிறார் அவர்.