“முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 10 ஆண்டுகளில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக” தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் மக்கள் பாதை அமைப்பு பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.

அதிமுகவிற்கு இது போதாத காலம் என்பது போல் கடந்துகொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கடந்த அதிமுக ஆட்சியில் முக்கியமானவர்களாக கவனிக்கப்பட்ட பலரும், பல விதமான பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

அதில் முக்கிய பிரச்சனையாக, கொடநாடு கொலை விவகாரம், சூடு குறையாமல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருப்பது தான். இந்த கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக, சட்டசபையில் விவாதிக்க திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த பிரச்சனை குறித்து பேசிய அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, “கொடநாடு விவகாரம் பற்றி எடப்பாடி பழனிச்சாமி மைக் பிடித்து பேசிய போது அவரது கை நடுங்கியது, ஆட்டம் கண்டது, இதை எல்லோரும் கவனிக்க வேண்டும்” பகிரங்கமாக தெரிவித்தார். இது, அதிமுகவிற்குள் பெரிய சலசலப்பையே ஏற்படுத்தியது.

இப்படி, கொடநாடு கொலை வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பிரச்சனையாக மாறியிருக்கும் இந்த சூழலில் தான், தற்போது புதிய தலைவலியும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதாவது, “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை கிட்டதட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்துவிட்டதாக” தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இது குறித்து, “நெடுஞ்சாலைத் துறையின் கருப்புப் பக்கங்கள்” என்ற பெயரில் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் வெளியீட்டு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பாதை இயக்க நிர்வாகிகள் “கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக நெடுஞ்சாலைத்துறையில் அரங்கேறிய ஊழல் பற்றி, அடுக்கடுக்கான புகார்களை பட்டியலிட்டு, அது தொடர்பான காரணங்களையும் விளக்கி கூறி உள்ளனர்.

இந்த குற்றச்சாட்டில் அதிகம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், “இந்த கொரோனா கால கட்டத்திலும் கூட, கடைசி 2 ஆண்டுகளில் அதிகம் செலவு செய்த ஒரே துறை அது, நெடுஞ்சாலைத் துறை மட்டுமே” என்றும், அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர்.

அத்துடன், “கடந்த 5 ஆண்டுகளில் போதிய அளவு சாலைகள் போட்டதற்கான எந்தத் தடமும் இல்லை” என்றும், அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

மேலும், “ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க செலவு செய்த பணத்தை, சந்தை மதிப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் எவ்வளவு முறைகேடுகள் நடந்திருக்கிறது என்பது தெரிந்து விடும்” என்றும், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த ரவி சுட்டிக்காட்டி உள்ளார்.

அதே போல், “ஆன்லைன் டெண்டர் என்று சொன்னாலும், அதில் விண்ணப்பத்தை மட்டும் தான் ஆன்லைனில் செய்யலாம் என்றும், ஆவணங்களை நேரில் தான் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அங்கு தான் முறைகேடுகள் நடக்கின்றன” என்றும், ரவி கூறியுள்ளார்.

“நெடுஞ்சாலைத்துறை பற்றிய அனைத்துச் செய்தியும் அந்த துறைக்கான வலைதளத்தில் பதிவிட வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

“ஆக மொத்தமாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஆட்சி நடத்திய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கிட்டதட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்திருப்பதாகவும்” அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார். இந்த விவகாரம், எடப்பாடி பழனிச்சாமிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அதிமுகவினர் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.