பலே பெண் ஒருவர், திருமணத்திற்கு வரன் தேடுவது போல் நடித்து 20 க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அடுத்து உள்ள சாயினிக்பூரி கண்டிகொண்டா பகுதியைச் சேர்ந்த 34 வயதான வாசு தேவன் என்பவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது பெற்றோர், இவருக்குத் திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து வந்துள்ளனர். அதன் படி, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்களது மகனுக்கு வரன் வேண்டி அனுகி உள்ளனர்.

அதன் படி, அந்த வரன் டீதடும் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில், இது தொடர்பாகப் பதிவு செய்து உள்ளனர்.

அதே இணைய தளத்தில் 28 வயதான திவ்யா என்ற இளம் பெண், தனது புகைப்படத்துடன் இருந்த சுயவிவர குறிப்புகளைப் பார்த்ததும், வாசு தேவன் தனது விருப்பத்தைக் கூறியிருக்கிறார்.

வாசு தேவனின் திருமண கோரிக்கைக்கு, அந்த பெண் திவ்யாவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, அவர்கள் இருவரம் தங்களது செல்போன் எண்ணைப் பகிர்ந்துகொண்டு, இருவரும் மணிக்கணக்கில் பேசி வந்து உள்ளனர்.

இப்படியான இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்த நிலையில், ஒரு நாள் திவ்யா, “என்னுடைய தோழிக்கு அவசரமாக 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்றும், தனக்கு உடனே பணம் அனுப்புங்கள் என்றும், திடீரென்று கேட்டிருக்கிறார்.

அத்துடன், பணம் போடுவதற்கு ஒரு வங்கி கணக்கையும் வாசு தேவனுக்கு அவர் அனுப்பி வைத்து இருக்கிறார்.

இதனால், தனது வருங்கால மனைவி கேட்கிறாரே என்று நினைத்த அந்த நபர், அதன் உண்மை தன்மையைத் தெரிந்துகொள்ளாமல், உடனே அந்த வங்கி கணக்கிற்குக் கடந்த ஜூலை 8 ஆம் தேதி 40 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைத்திருக்கிறார்.

இதனையடுத்து, “மேலும் என் தோழிக்குப் பணம் தேவைப்படுவதாக” கூறி, வாசு தேவனிடமிருந்து கடந்த 4 ஆம் தேதி மேற்கொண்டு 40 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண் திவ்யாவை நேரில் சந்திக்க வேண்டும் என்று, வாசு தேவன் கூறியிருக்கிறார்.

ஆனால், அதன் பிறகு அந்த பெண் அவரை தொடர்பு கொள்ளவே இல்லை. இதனால், சற்று சந்தேகம் அடைந்த அவர், அந்த பெண் இணையத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியான தூத்துக்குடி சென்று விசாரித்து உள்ளார்.

அப்போது, அந்த முகவரியில் திவ்யா என்ற பெயரில் யாருமே இல்லை என்பது தெரிய வந்தது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மனம் நொந்து போன அவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதன் படி, வாசுதேவன் பணம் அனுப்பிய வங்கி கணக்கு முகவரியை விசாரித்த போது, “அது தூத்துக்குடி மாவட்டம் நான்குமாவடியைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மனைவி 36 வயதான கீதா” என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, “அந்த கீதா தான்,  திவ்யா என்ற பெயரில் திருமண இணையதளத்தில் போலி கணக்கு தொடங்கி, புதிய மோசடியில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அத்துடன், இதே போன்று மொத்தமாக 20 க்கும் மேற்பட்ட ஆண்களை அவர் ஏமாற்றி பணம் பறித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவர் மோசடிக்கு பயன்படுத்திய 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சைபர் குற்றப் பிரிவு போலீசார், “கீதா, இன்னும் எத்தனை பேரை ஏமாற்றியிருக்கிறார், இன்னும் அவர் என்ன மாதிரியான குற்றங்களைச் செய்திருக்கிறார்” என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.