தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் இருந்தாலும்கூட, இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கட்சி மாற்றங்கள் சர்வசாதாரணமாக நிலவிவருகிறது. இதில் திமுகவில் இருந்து விலகிய கு.க.செல்வம், மிகுந்த பரபரப்புகளை கடந்த சில தினங்களாக ஏற்படுத்திவருகிறார்.

கட்சித்தலைமைக்கு தெரிவிக்காமல், தமிழக பாஜக தலைவரோடு டெல்லி சென்று, அங்கு தேசிய பாஜக தலைவரை சந்தித்திருந்தார் கு.க.செல்வம். அதைத்தொடந்து, திமுக மீது கடும் விமர்சனங்களையும் வைத்தார் அவர். சென்னையின் இதயப்பகுதியென சொல்லப்படும் ஆயிரம் விளக்கு பகுதியின் எம்.எல்.ஏ.வான செல்வம், தொடர் குற்றச்சாட்டுகளை வைத்தது, திமுகவே எதிர்ப்பாராததுதான்.

சூழலை சரிசெய்ய எண்ணிய திமுக தலைமை  “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது. 

இந்தக் கடிததத்துக்கு இன்று பதிலளித்த கு.க.செல்வம், அதில், ``தங்கள்‌ நோட்டீஸ்க்கு நான்‌ விபரமாக விளக்கம்‌ அளிப்பதற்கு சில விவரங்கள்‌ தேவைப்படுகின்றன. தாங்கள்‌ விவரங்கள்‌ இல்லாமல்‌ மேலோட்டமாக அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸில்‌ நான்‌ பொய்யான தகவல்கள் சொன்னதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், என்ன பொய் என்று குறிப்பிடப்படவில்லை" என்று கூறியிருந்தார்.

கு.க.செல்வத்தின் இந்த தொடர் நடவடிக்கைகள், திமுகவிலிருந்து பிறரையும் தாக்கத் தொடங்கியது. இன்னும் நிறைய பேர் திமுகவில் இருந்து விலகவிருப்பதாக வதந்திகள் வந்தன. எம்.எல்.ஏ. திருநாவுக்கரசு, அதில் முக்கியமானவர். தன்னைப் பற்றி இப்படி வதந்தி வந்ததும், `தளபதியை முதல்வராக பார்ப்பது மட்டுமே என் கனவு. நான் கட்சி மாற மாட்டேன்' என வேகவேகமாக விளக்கவுரை தந்தார்.

இந்நிலையில் அதிமுக மற்றும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள், திமுக தலைமை மீது விமர்சனம் இருக்கும் திமுகவினர், எங்களோடு இணையலாம் என சொல்லி, திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியொரு சம்பவம், இன்று திமுகவின் பொருளாளராக இருந்த துரைமுருகன் அவர்களுக்கும் நிகழ்ந்துள்ளது. 

அதிருப்தியாளர்கள் அதிகரிப்பு காரணமாக, தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன், பொதுச் செயலர் பதவி கேட்டு, போர்க்கொடி துாக்கி உள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. பொதுச் செயலர் பதவி தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு, பின்னர் ஏமாற்றியதால், கடும் அதிருப்தியில் இருக்கும் துரைமுருகன், எந்த நேரத்திலும், கு.க.செல்வம் போல அதிரடி முடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்நிலையில் இன்று, சென்னை மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் தொடர் பரிசோதனை மையங்களை ஆய்வு செய்த அதிமுகவை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அங்கிருந்த பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, ``அதிமுக ஒரு ஆலமரம், அதிருப்தியில் உள்ள திமுகவினருக்கு நிழல் கொடுக்கும். திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.
 
கு.க செல்வம் கட்சியில் இருந்து விலகியது உள்கட்சி விவகாரம். திமுகவின் முதல் விக்கெட் கு.க செல்லம். துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு தான் அவர் எதிர்பார்த்து காத்திருந்தார். அவருக்கு பதவி கொடுக்காததால் அடுத்த விக்கெட் அவராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே அதிமுகவிற்கு துரைமுருகன் வந்தால் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

அதிமுகவின் இந்த அழைப்பு, திமுகவை நிச்சயம் அதிரவைத்திருக்கும் என்றே பலரும் கணிக்கின்றனர். இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றிருந்ததே, நிர்வாகிகளின் அதிருப்திக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.