காவல் நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, “ தமிழக சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதால், காவல் நிலையங்களில் தரப்படும் சிறிய புகார்களும் பெரிதுபடுத்த வாய்ப்புள்ளதாக” குறிப்பிட்டுள்ளார். 

Chennai police AK Viswananth new rules

இதனால், அதற்குத் தகுந்தார்போல் அனைத்து காவல் நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், அனைவரும் சரியாக நடந்துகொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக, “பெண்கள், சிறுவர், சிறுமியர், நோய்வாய்ப்பட்டோர், முதியோரை விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அழைத்து வரக்கூடாது” என்றும் கட்டளையிட்டுள்ளார்.

“ மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடிகாரர்களையும் எக்காரணம் கொண்டும் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைக்கக்கூடாது என்றும், சந்தேகத்தின் பேரில், காவல் நிலையத்துக்கு யாரை அழைத்து வந்தாலும், பாதுகாப்பாக வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி உள்ளார்.

அதேபோல், “ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள சிறை அறையில், குற்றவாளிகள் யாரையும் அடைத்து வைக்கக்கூடாது என்றும், வழக்கு தொடர்பாக யாரையும் கைது செய்தால் அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “காவல் நிலையத்தில் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நடக்காத வகையில், அனைத்து போலீசாரும் செயல்பட வேண்டும்” என்றும் கேட்டுள்ளார். 

“சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் காவல் நிலையங்களில் தரப்படும் சிறிய புகார்கள் கூட பெரிய அளவில் பேசப்படும் என்பதால், போலீசார் அனைவரும் கவனமாக பணியாற்ற வேண்டும் என்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தி உள்ளார்.