கள்ளத் தொடர்பு காரணமாக, “என் மனைவியே என்னைக் கொலை செய்ய முயன்றார்” என்று, கணவன் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை ஷெனாய் நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து, சுரேஷ் - சரண்யா தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது, அந்த பெண் குழந்தைக்கு 5 வயது ஆகிறது.

இதனிடையே, கணவர் சுரேஷ்க்கு, அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞனுடன் கடந்த 10 ஆண்டுக்கால நட்பு இருந்துள்ளது. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், வினோத்தை அடிக்கடி தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் சுரேஷ்.

இப்படியாக, சுரேஷ் வீட்டிற்கு அடிக்கடி வினோத் வந்து சென்றதில், சுரேஷின் மனைவி சரண்யாவுக்கும், வினோத்துக்கும் இடையே கள்ளக் காதல் வந்துள்ளது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் சுரேஷ்க்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தன் மனைவியை அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனாலும், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சரண்யா, வினோத்துடன் கள்ளக் காதலைத் தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சுரேஷ் மீண்டும் தன் மனைவியைக் கண்டிக்கவே, கணவன் - மனைவி இடையே பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது, மனைவியை சுரேஷ் தாக்கியதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து, தன் 5 வயது பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சரண்யா, வினோத்துடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ், அங்குள்ள டி.வி.சத்திரம் காவல் நிலையத்தில் மனைவி கள்ளக் காதல் குறித்தும், தன் நண்பன் வினோத்தின் தவறான நடவடிக்கையும் கொடுத்து, தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வினோத் மற்றும் சரண்யாவிடம் போலீசார் பேசியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, கடந்த 26 ஆம் தேதி அன்று, கணவர் சுரேஷ்க்க போன் செய்த மனைவி சரண்யா, “உன்னிடம் தனியாகப் பேச வேண்டும். நீ வா” என்று கணவனை தனியாக அழைத்து உள்ளார். மனைவி தானே அழைக்கிறார் என்று சுரேஷ், தனியாக வந்துள்ளார்.

அப்போது, அங்கு மறைந்து நின்ற வினோத் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர், சுரேஷை கொலை வெறித் தனமாகத் தாக்கி உள்ளனர். இதில், அவருக்கு மூக்கு, கண் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் சொட்டச் சொட்ட உயிர் பிழைத்தால் போதும், என்று சுரேஷ் அங்கிருந்து எப்படியோ தப்பி ஓடி உள்ளார். 

இதனையடுத்து, கடந்த சில நாட்களாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், தற்போது ஒரு வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “என் மனைவி, வினோத் என்ற என் 10 ஆண்டு கால நண்பனுடன் கள்ளக் காதலில் இருப்பதாகவும், அதன் காரணமாக, என் மனைவி என் நண்பனுடன் சேர்ந்து என்னைக் கொலை செய்யப் பார்க்கிறார்கள். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட எனக்கு போன் செய்து, வெளியே வந்தால், என்னை வெட்டி கொன்றுவிடுவதாக வினோத் மிரட்டுகிறான். எனக்கு பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. போலீசார் எனக்குப் பாதுகாப்பு தர வேண்டும்” என்றும், அந்த வீடியோவில் சுரேஷ் பேசி உள்ளார்.

இதனால், மனைவி மற்றும் நண்பனின் கள்ளக் காதல் குறித்தும், அவர்கள் தன்னை கொலை செய்ய முயன்றதும் குறித்தும் சுரேஷ் வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கும் சென்றுள்ளதாகவும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.