திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு  திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது, உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வை பொருத்தவரை தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் குளறுபடி ஏற்படுகிறது. ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்காமல் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக நான் அவரிடம் கேள்வி கேட்பேன். மாணவர்களுக்கு நீட் தேர்வு பலி பீடமாக உள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன், முதலில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.