கொரோனா அச்சம் காரணமாக இன்னும் பள்ளி கல்லூரிகள் ஏதும் திறக்கப்படவில்லை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் திறக்க வாய்ப்பு இருப்பதால் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டணம் வசூலித்து வருகிறது.

அதன்படி செப்.5 ஆம் தேதிக்குள் செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதுமட்டுமில்லாமல், கட்டணத்தை செலுத்த தவறினால் மாணவர்கள் வகுப்புகளில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் மாணவர்கள் பட்டியலில் இருந்து அவர்கள் பெயர் நீக்கப்படும் என்றும் அறிவித்தது.

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், “செமஸ்டர் தேர்வுக்கான கட்டணத்தை ஆகஸ்டு 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறினால் அபராதத்துடன் சில படிப்புகளுக்கு செப்டம்பர் 3-ந்தேதிக்குள்ளும், சில படிப்புகளுக்கு செப்டம்பர் 5-ந்தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.
 
வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்த தவறும் மாணவர்கள், வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெயர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்பட்டு, செப்டம்பர் 7-ந்தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்ககோரி நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் முன்பு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பி.இ., செமஸ்டர் கட்டணம் செலுத்த செப்டம்பர் 19ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் இதுபற்றி இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``இந்த அறிவிப்பு மனித நேயமற்றது, கண்டனத்திற்குரியது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இதுவரை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. பெரும்பாலான பெற்றோர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள்; குடும்பங்களில் பலர் வேலை இழந்திருக்கிறார்கள்; சிறு, குறு தொழில்கள் கடும் நட்டத்தைச் சந்தித்திருக்கிறது.

ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு, மாணவர்களையும் பெற்றோரையும் கடுமையான மன உளைச்சலில் தள்ளியிருக்கிறது; பலர் ஆழமான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இது மாணவர்களின் கல்வியையும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது.

பேரிடரிலிருந்து மீள வழிவகையின்றி, தத்தளித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் விதித்துள்ள மூன்று நாள் கெடு, ஏழு நாள் கெடு என்பவை மிகுந்த வேதனை அளிப்பதாகவும், ஊரடங்கு இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் அவர்களின் சோகமயமான சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள மறுக்கும் இதயமற்ற செயலாகவுமே எண்ணிட வேண்டியிருக்கிறது.

ஆகவே, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, சூழ்நிலைகளுக்குப் பொருத்தமில்லாத இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று 3.9.2020 வரை விதித்துள்ள கெடுவை, இந்த மாத இறுதி வரை நீட்டித்துக் கொடுக்க வேண்டும்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, மாணவர்கள் நலன் காத்திடத் தாமதமின்றி முன் வர வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.