சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இந்த படத்தில் நிதி அகர்வால், பாரதிராஜா, நந்திதா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தை திண்டுக்கல்லைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. 

படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியானது. பின்னணி இசை மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் என ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. சிம்பு தன் உடல் எடையை குறைத்த பிறகு நடித்த முதல் படம் ஈஸ்வரன் என்பதால், திரையரங்கில் இப்படத்தினை கொண்டாட ஆவலாக உள்ளனர் சிம்பு ரசிகர்கள். எதிரியை பார்த்து சிம்பு பேசும் வசனத்திற்கு திரையரங்கம் அதிரும் என்றே கூறலாம். நீ அழிகிறதுக்காக வந்த அசுரன்னா... நான் காக்குறதுக்காக வந்த ஈஸ்வரன் டா என்று பஞ்ச் பேசியிருந்தார். 

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஈஸ்வரன் படத்தின் டீஸர் மற்றும் தமிழன் பாட்டுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. படத்தின் ட்ரைலர் வெளிவருமா என்ற ஆவலில் உள்ளனர் சிம்பு ரசிகர்கள். 

ஈஸ்வரன் திரைப்படத்தை தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் ஒரே நாளில் வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. அதனால், ஆத்திரமடைந்த திரையரங்க உரிமையாளர்கள் ஈஸ்வரன் படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து ஆடியோ வெளியிட்டுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் ஒரே நாள் திரையரங்கு மற்றும் ஒடிடி வெளியாவதை அனுமதித்தால் அனைத்து திரைப்படங்களும் இதுபோல முடிவெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். எனவே ஈஸ்வரன் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் புதிய மியூசிக் மேக்கிங் வீடியோ வெளியானது. படத்தின் பின்னணி இசை மற்றும் டைட்டில் ட்ராக் உருவான விதம் வீடியோவில் உள்ளது. 

இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் கலந்துகொள்ள இருக்கிறார் சிம்பு. கல்யாணி பிரியர்தர்ஷன், பிரேம்ஜி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த வாரம் சிம்புவின் பத்து தல படத்தின் அறிவிப்பு வெளியானது. கெளதம் கார்த்திக் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணா இயக்கவுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.