கடந்த 2017-ம் ஆண்டு மாநகரம் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். இதனைத்தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார். 

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. 

ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார்.என்ன நடந்தாலும் மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்பதை தெரிவித்தனர் படக்குழுவினர். 

இந்நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. 
ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அறிவிப்பை போஸ்டர் வாயிலாக வெளியிட்டுள்ளார் லோகேஷ். கமல் ஹாசன் வடிவில் சுற்றி துப்பாக்கிகள் உள்ளது. போஸ்டரில் "Once upon a time there lved a ghost" என்ற வாசகம் உள்ளது. இதை பார்த்த திரை விரும்பிகள் கேங்ஸ்டர் படமா அல்லது ஹாரர் படமா என்ற ஆவலில் உள்ளனர். 

கமல்ஹாசனின் 232 படமான இந்த படத்தை கமல் ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு சம்மர் ரிலீஸ் என்ற சுவையூட்டும் செய்தியும் போஸ்டரில் உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தீவிர கமல் ஹாசன் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் இந்த படத்தில் உலகநாயகனை எப்படி திரையில் காண்பிப்பார் என்ற ஆவல் ரசிகர்களிடையே வலம் வருகிறது.