“மாணவர்களின் மூக்குத்தியைக் கூட கழற்றி விட்டுத் தேர்வு எழுத வேண்டுமென்றால், மூக்குத்தியில் பிட்டு பேப்பரை வைத்து எடுத்துச் செல்ல முடியுமா என்ற சிறு அறிவு கூட இல்லாமல் நீட் தேர்வை நடத்தி வருகிறார்கள்” என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாகப் பேசி உள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால், ஆரம்பம் முதல் இன்று வரை தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்துக்கொண்டே இருக்கிறது. 

ஆனால், அப்படி எழும் பற்றி மத்திய அரசு துளியும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் நீட் தேர்வு சர்ச்சைகள் மட்டும், தமிழகத்தில் தொடர்ந்து உயிர் பழியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் படி, தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பங்களும் அரங்கேறி இருக்கின்றன. தமிழகத்தில் நீட் தேர்வு உயிர் பழிகள் இனியும், நாளையும் நடக்கும் என்ற விமர்சனங்களும் தற்போது எழுந்துள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிற பேராசிரியர்கள், ஏற்கனவே இருந்த கல்வி முறையில் பயின்று வந்தவர்கள் தான். அவர்கள் நீட் தேர்வு முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இல்லை. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு நடத்தப்படுகிற பாடமும் பழைய முறை தான். பாடம் நடத்துகிற பேராசிரியர்களும் பழைய முறையில் பயின்று வந்தவர்கள் தான். 
எனினும், நீட் தேர்வின் மூலம் மருத்துவர்களின் தரம் மேம்பட்டு விடும் என்பதை, இன்றைய அறிவார்ந்த சமூகம் எப்படி ஏற்கிறது?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.

“சிறுவயதிலேயே மருத்துவராக வேண்டு என்ற கனவோடு இருக்கிற நமது பிள்ளைகள் அதற்காகவே உழைத்து 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். தங்கை அனிதாவும் அதேபோல அதிக மதிப்பெண்களைப் பெற்றவள் தான். 2000 மதிப்பெண்களுக்கு 1,195 வரை மதிப்பெண்கள் பெற்ற பிள்ளைகள் நீட் தேர்வில் தோல்வியுற்றார்கள் என்பதற்காக, நிராகரிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வில் எல்லையில் மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றவர்கள் மருத்துவம் படிக்கத் தகுதி பெறுகிறார்கள் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?” என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

“கடந்த முறை ஆள் மாறாட்டத்தின் மூலம் எண்ணற்றவர்கள் நீட் தேர்வின் வழியே உள்நுழைந்து விட்டார்கள். வட நாட்டில் தேர்வரே தேர்வெழுதுகிற மாணவர்களுக்கு முறைகேடாக உதவுவதைப் பார்க்கிறோம். அப்படியென்றால், தகுதியற்ற போலி மருத்துவர்களை நீட் தேர்வின் மூலமே உருவாக்குகிறார்கள் என்று தான் பொருள்” என்றும், சீமான் சந்தேகத்தைக் கிளப்பி உள்ளார். 

மேலும், “தேர்வு எழுதும் போது நல்ல திறந்த மனநிலையில் இருக்க வேண்டும் என்பதால் தான் பெரியவர்களை வணங்கி வாழ்த்துகள் பெற்று, வழிபாடு செய்து விட்டு மாணவர்கள் செல்கிறார்கள். ஆனால், தேர்வெழுதச் செல்லும் போது மூக்குத்தியைக் கழற்றச் சொல்லி, காதணியைக் கழற்றச்சொல்லி, மேலாடையைக் கத்தரித்து, தாலியைக் கழற்றச் சொல்லித் தேர்வறைக்குள் அனுப்பினால், அவர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள்? எப்படித் தேர்வை எதிர்கொள்வார்கள்? காதணிக்குள்ளும், மூக்குத்திக்குள்ளும் ஒளித்து வைத்து முறைகேடு செய்து தேர்வெழுத முடியும் என நம்புகிற இந்நாடு, வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வித முறைகேடும் செய்ய முடியாது என்பது எவ்வளவு வேடிக்கையானது?” என்றும், அதிரடியாகப் பேசி உள்ளார்.

அதே போல், “12 ஆம் வகுப்பில் பெறுகிற மதிப்பெண்கள் பயனற்றதென்றால், எதற்குப் பள்ளிக் கல்வித்துறை மதிப்பெண்களை நிர்ணயம் செய்கிறது?” என்றும், ஆவேசமாகக் கேள்வியை எழுப்பி உள்ளார். 

“இப்பாட முறையையே முழுவதுமாக அகற்றி விட்டு நேரடியாக நீட்டுக்கான பாடத்தையே நடத்தி விடலாமே?” என்றும், அவர் அடுக்கடுக்கான கேள்வியை 
முன் வைத்துள்ளார். 

“நீட் தேர்வைக் கொண்டு வந்து, அதன் மூலம் தனியார் பயிற்சி நிலையங்கள் லட்சக்கணக்கில் கொள்ளை லாபம் ஈட்டி, கல்வியை மேலும் வணிகமாக்கத் தான் இம்முயற்சிகள் உதவுகிறதே ஒழிய, கல்வியின் தரத்தைத் துளியளவும் தரம் உயர்த்த வில்லை என்பதுதான் உண்மை. கல்வி, மருத்துவத்தைத் தனியார் முதலாளிகளிடம் முழுவதுமாகத் தாரைவார்த்து விட்டு கல்வியைத் தரப்படுத்துகிறோம் என்று கூறுவது கேலிக்கூத்து. 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது இறந்து போகிற நிலையில் தான் தற்காலத்தில் நம் பிள்ளைகளின் மனவலிமை இருக்கிறது. இந்நிலையில், புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு வைத்தால் கொத்துக்கொத்தாக நம் பிஞ்சுப்பிள்ளைகள் கருகி உதிர்ந்துவிடுவார்கள்” என்றும், ஆவேசமாக பேசி உள்ளார் சீமான்.

“நீட் தேர்வின் மூலம் தான் மருத்துவர்களைத் தரப்படுத்த முடியும் என்றால், ஏற்கனவே நீட் தேர்வெழுதாது மருத்துவரான மருத்துவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றும், சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

“ஒரே நாளில் பணம் செல்லாது என்று அறிவித்தது போல, அவர்கள் மருத்துவரானது செல்லாது என்று அறிவிப்பீர்களா? அறிவிக்க முடியுமா? எல்லா மருத்துவர்களையும் ஒரே நாளில் தகுதியிழப்புச் செய்து வெளியேற்றிவிடுவார்களா? அந்த மருத்துவர்கள் தரமானவர்கள் என்றால், அதே முறையில் இன்றைக்குப் படிக்கிற பிள்ளைகள் மட்டும் எப்படித் தகுதியற்றவர்களாக ஆவார்கள்?” என்று, மத்திய அரசைப் பார்த்து அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.

குறிப்பாக, “இத்தனை உயிர்களை இழந்து தவிக்கும் நிலையிலும், திமுகவும் - அதிமுகவும் மாற்றி மாற்றிக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் இழிசெயல்” என்றும் சீமான் கவலையோடு பேசி உள்ளார்.

முன்னதாக, நெல்லை மாவட்ட தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்த ஒரு புதுமண பெண்மணி, தனக்குத் திருமணம் ஆன 4 வது மாதத்திலேயே தன் எழுத்தில் இருந்த தாலியை முதற்கொண்டு தானே கழற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார். கழுத்தில் அணிந்திருந்த தாலி, பூ மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றிச் சொல்லி அங்கிருந்தவர்கள் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நீ்ட் தேர்வு எழுதச் சென்ற அந்த புதுமணப்பெண் தாலி, பூ, காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றி தன் கணவரிடம் கொடுத்து விட்டுத் தேர்வு எழுதச் சென்றார்.

இதனை அங்கு நின்றவர்கள், வேதனையுடனுடன் அதிர்ச்சியுடனும் பார்த்தார்கள். அத்துடன், இந்த காட்சிகளை அங்கு நின்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வரலாக்கினர். இதன் காரணமாக, நீட் தேர்வு தற்கொலை சர்ச்சைகளுக்கு இணையாக, இந்த தாலி சர்ச்சைகளும் வைரலானது. இதனால், தமிழக பண்பாட்டுக் கலாச்சாரங்கள் பின்பற்றாமல், அதனைத் திட்டமிட்டே அழிக்கும் வேலைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.