இயக்குனர் தரணியிடம் உதவியாளராக இருந்தவர் பாபு சிவன். தளபதி விஜய், அனுஷ்கா உள்ளிட்டோரை வைத்து வேட்டைக்காரன் படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். விஜய் நடித்த குருவி படத்திற்கு வசனகர்த்தவாக இருந்திருக்கிறார். பாபு சிவன் வேட்டைக்காரன் படத்தை தவிர வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை.

அவர் ராசாத்தி எனும் தொலைக்காட்சி தொடரை இயக்கி வந்தார். பாபு சிவன் சென்னையில் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாபு சிவனின் இரண்டு மகள்களும் நீட் தேர்வு எழுத சென்றார்களாம். பாபு சிவனின் மனைவி மகள்களுக்கு துணையாக சென்றிருக்கிறார்.

வீட்டில் பாபு சிவன் மட்டும் தனியாக இருந்திருக்கிறார். தேர்வு முடிந்து வீடு திரும்பியவர்கள் பாபு சிவன் மயங்கிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை தாம்பரத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அது கோவிட் சிகிச்சை மையம் என்பதால் பாபு சிவனை அங்கு அனுமதிக்காமல் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். 

பாபு சிவனின் நிதி நிலைமை சரியில்லை போல, இதையடுத்து தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாது என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அங்கு பாபு சிவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பாபு சிவனுக்கு தனக்கு இந்த பிரச்சனை எல்லாம் இருந்தது தெரியவில்லை. வலி ஏற்பட்ட போது அதை அவர் பெரிதுபடுத்தாமல் இருந்துவிட்டார். அவரின் சிறுநீரகங்கள் செயல் இழந்து வந்ததால் உடனே டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். நேற்று காலை டயாலிசிஸ் நடந்துள்ளது. ஆனால் பாபு சிவன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். பாபு சிவனுக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கோவிட் 19 பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. 

பாபு சிவனுக்கு வயது 54. அவரின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினரும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாபு சிவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக திரைப்பிரபலங்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நேற்று முன்தினம் தான் பிரபல நடிகர் ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தார். இந்நிலையில் பாபு சிவன் இறந்த தகவல் அறிந்தவர்கள் தினமும் ஏதாவது மரண செய்தியாக இருக்கிறதே என்று வருத்தப்பட்டு பதிவு செய்து வருகின்றனர். இந்த 2020 ஆண்டு திரைத்துறை சார்ந்தவர்களுக்கு ராசியில்லாத வருடமாக திகழ்கிறது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.