திரையரங்குகளுக்கு 50 % இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், பல படங்கள் வெளியீட்டை உறுதி செய்து வருகின்றன. அந்த வரிசையில் கபடதாரி படம் ஜனவரி 28-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள திரைப்படம் கபடதாரி. இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சைமன் K கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது. 

தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்தவுடன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கி செப்டம்பர் 29-ம் தேதியுடன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு. முழுமையாக இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. 

ஜனவரி 28-ம் தேதி தைப்பூச தினமாகும். அன்றைய தினத்தைப் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழக அரசு. ஆதலால், அன்றைய தினத்தை வெளியீட்டுத் தேதியாக முடிவு செய்து, படக்குழுவினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படத்தின் சென்சார் விவரமும் தெரியவந்துள்ளது. இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழுமம். 

இந்நிலையில் கபடதாரி படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ட்ராஃபிக் போலீஸாக இருக்கும் சிபி சத்யராஜ், நடந்த குற்றத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதையாக இருக்கக்கூடும். விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

சமீபத்தில் ரேஞ்சர் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார் சிபி. தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன் மற்றும் மதுஷாலினி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.