விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் 21 டிசம்பர் 2018-ல் திரைக்கு வெளிவந்திருக்கும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கருணாகரன், ரெஜினா, ஓவியா, யோகிபாபு, சிங்கமுத்து, லொள்ளு சபா மனோகர், ஆனந்தராஜ், ரவிஷங்கர், மன்சூர் அலி கான், லிவிங் ஸ்டன், வடிவுக்கரசி போன்ற நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். எவ்வித கதாபாத்திரமாக இருந்தாலும் அதை நன்கு உணர்ந்து, தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் இவரது நடிப்பாற்றல் பாராட்டிற்குரியது.

இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் போலீஸ் அதிகாரி சத்தியமூர்த்தியாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரி என்றாலே முறுக்கு மீசையுடன் ஃபிட்டான உடல் அமைப்பு கொண்டு புல்லட் அல்லது ஜீப்பில் தான் தோன்ற வேண்டும் என்ற ஃபார்முலாவை உடைத்து படம் முழுக்க கியர் சைக்கிளில் வருகிறார்.

ஆர்ப்பாட்டம் இல்லாத இன்ட்ரோ இவரது கேரக்டரை வெளிக்காட்டுகிறது. விளையாட்டுத்தனமாக வெறும் புத்தியை மட்டும் உபயோகிக்கும் போலீஸ் கான்ஸ்டபிலாக படம் முழுதும் பயணித்திருக்கிறார். சீனியர் அதிகாரிக்கு உணவு வாங்கி தந்து நல்ல பெயர் சம்பாரிக்கும் நோக்கில் விஷ்ணுவுடன் பணிபுரியும் ஒருவராக பயணிக்கிறார் நடிகர் கருணாகரன்.

இப்படத்திற்கு நடிகர் சிங்கமுத்து தூண் என்றே கூறலாம். இவரது இயற்கையான காமெடி ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்கச்செய்தது. கிராமப்புற சப்ஜெக்ட் நிறைந்த படங்களுக்கு சிங்கமுத்து அவசியம் தேவை என்று நிரூபித்திருக்கிறார்.

ராஜி என்னும் கேரக்டரில் படத்தின் கதாநாயகியான ரெஜினாவை நீண்ட நாட்கள் கழித்து கல்யாண விழாவில் சந்திக்கிறார் ஹீரோ. வழக்கம் போல் பார்த்தவுடன் காதல் அடுத்து பாடல் என்று கதை நகர்கிறது. ஹீரோவுக்கு கிடைத்த அதே அளவு வரவேற்பு மற்றும் விசில் சத்தம் நடிகர் யோகிபாபு வரும் காட்சிகளுக்கு. டோனி எனும் ரோலில் அனைத்து ஆங்கிளிலும் தனது செயலால், வசனங்களால் அனைவரையும் கவர்கிறார்.

வில்லனாக சைக்கிள் ஷங்கர் எனும் ரோலில் வரும் ரவிஷங்கர் பாத்திரம் டம்மியாக தெரிந்தாலும், இப்படிப்பட்ட படத்திற்கு இதுபோல் வில்லன் தான் தேவை என்று இயக்குனர் கருதியிருக்கலாம். படத்தின் பாடல்கள் அவ்வளவு பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் ஒரு காமெடி-ஆக்ஷன் படத்திற்கு தேவையான பின்னணி இசையை தந்திருக்கிறார் லியோன் ஜேம்ஸ்.

முழுக்க முழுக்க தொடர்ச்சியான காமெடி காட்சிகள் என்பதால் இப்படத்தின் எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு படத்திற்கு எடிட்டிங் எந்த அளவிற்கு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆட்டக்காரி கனகாவாக வரும் ஓவியா சில காட்சிகள் வந்தாலும் கட்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

ஓவியா அதிக நேரம் படத்தில் வருவார் என்று எதிர்பார்த்து ஓவியா ஆர்மி செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. படத்தில் இவர் உரைக்கும் ஸ்பிரே அடிச்சிடுவேன் போன்ற வசனங்கள் பிக்-பாஸ் ஓவியாவை நினைவு படுத்துகிறது.

வில்லனின் செல்போனை திருடி அதை வைத்திருக்கும் லொள்ளு சபா மனோகரின் பங்காற்றல் படத்திற்கு கூடுதல் வலு. அவரது மாடுலேஷனில் நடித்து கச்சிதமாக கதையில் சிறுது நேரம் வலம் வருகிறார். நம்பகத்தன்மையை தாண்டி வரும் சேசிங் காட்சிகள் 80களில் வெளிவந்த சினிமாக்கள் போல் உள்ளது. ஷேர் ஆட்டோ சந்திரன் எனும் பாத்திரத்தில் வரும் ஆனந்தராஜின் நடிப்பு சில இடங்களில் முகம் சுழிக்க வைத்தாலும், சர்ப்ரைஸான பிளாஷ்பாக்குடன் இறுதியில் ஸ்கோர் செய்துவிட்டு போகிறார்.

எவ்வித லாஜிக்கும் இல்லாமல் சிறிது நேரம் சிரிக்கவேண்டும் என்ற ரசிகர்களுக்கு இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் நிச்சயம் பிடிக்கும். ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் இப்படம் நல்ல பொழுதுபோக்கம்சமாக அமைய வாய்ப்பு உள்ளது.

சினிமாவை மூலை முடுக்கில் அலசி ஆராயும் நபர்கள் மற்றும் தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் அதிமேதாவிகளுக்கு இப்படம் தீனிபோடாது என்பதே உண்மை. ராட்சசன் மாதிரி ஒரு படம் தந்து விட்டு இந்த படமா என்று கேள்வியை முன்வைப்போருக்கு, ஒரு நடிகர் பிற தரப்பு ரசிகர்களையும் கவர வேண்டுமென்றால் இதுபோலவும் படம் தரவேண்டும்.

சிறந்த நடிகரை தொடர்ந்து சிறந்த தயாரிப்பாளராகவும் விளங்கிவரும் விஷ்ணுவிஷால், மென்மேலும் சிறந்த படங்களை தந்து டாப் ஹீரோக்கள் வரிசையில் வரவேண்டும் என்று கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.