ஒரு சில படங்களே, படம் என்பதை தாண்டி நம்முள் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் பார்த்த விஷயங்கள் போலவே இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் கர்ணன். பரியேறும் பெருமாள் எனும் உன்னத படைப்பை தந்த அதே மாரி செல்வராஜ் தான் கர்ணன் எனும் கவசத்தை ரசிகர்களுக்கு தந்துள்ளார். 

 

பொடியங்குளம் எனும் குக்கிராமத்தில் தொடங்குகிறது கர்ணனின் கதை. அடிப்படை உரிமைகள், கிராம மக்களின் உரிமை என உரிமைக்காக போராடும் கர்ணனே கதையின் நாயகன். சாதி ஏற்ற தாழ்வு, தீண்டாமை போன்ற விஷயங்களுக்கும் சேர்த்து ஒலிக்கிறது கர்ணனின் குரல். மக்களுக்காக கர்ணன் என்ன செய்தான் ? கர்ணனின் லட்சியம் என்ன ஆகிறது ? என்பதை உரக்க உரைப்பதே படத்தின் கதைக்கரு. 

 

உரிமைக்காக உணர்வுடன் போராடும் துடிப்பு மிகுந்த இளைஞனாக காட்சி தந்துள்ளார்...மன்னிக்கவும்...வாழ்ந்திருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த நடிப்பின் அசுரனுக்கு நடிக்க சொல்லியா தரணும் ? நெல்லை கிராமத்து தொணியாகட்டும், நடை, ரஜினி டீ-சர்ட், கோடு போட்ட கைலி உடை என நம் கவனத்தை ஈர்க்கிறது தனுஷ் எனும் மூன்றெழுத்து மந்திரம். கையில் கத்தியுடன் தனுஷ் பேசும் வசனம், கத்தியை விட கூர்மையாக இருக்கும். 

இயக்குனர் மாரி செல்வராஜ், மனுஷன் வேற மாதிரி...பொதுவாக இறந்தவர்கள் இறைவனுக்கு சமம் என்று கூறுவார்கள். மறைந்தவர்களை மனிதனின் தேவதையாக, காவல் தெய்வமாக உருவகம் கொண்டு காண்பித்துள்ளார் மாரி. படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். கிராமத்து ரொமான்ஸ், நரம்பு புடைக்கும் சண்டை காட்சிகள், சீரான கதைக்களம் போன்றவற்றில் ஸ்கோர் செய்தவர். வசனங்களில் ஒரு படி மேல் சென்று செஞ்சுரி போடுகிறார். குறிப்பாக படத்தில் ஓர் வசனம் இருக்கும்... "மாடசாமினு பேர் வச்சா... மாட்டுக்கா பொறந்திருப்போம்".. இந்த வசனத்தை கூட்டத்தில் உள்ள ஒரு நடிகர் பேசுவார்.. திரையரங்கே அதிருது. மக்களின் மனதில் உள்ள விஷயத்தை திரையில் கொண்டு வருபனே இயக்குனர். அதை சரியாக செதுக்கியுள்ளார் மாரி. கிராமப்புற பகுதிகளில் நடக்கும் வன்கொடுமைகளை சரியாக காட்டியுள்ளார் மாரி. karnan movie review

படத்தில் ஹீரோவுடன் நடித்த நடிகர்களை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட், துணை நடிகர்கள் என்றெல்லாம் சொல்வார்கள். அதை உடைத்து காட்டியுள்ளனர் கர்ணன் படத்தில் நடித்த நடிகர்கள். லால், ரஜீஷா, கௌரி, அழகம் பெருமாள், லக்ஷ்மி பிரியா, குதிரை வைத்திருக்கும் சிறுவன், பொடியங்குளம் ஊர் மக்களாக வரும் அனைவரும் அக்கிராம மக்களாகவே வாழ்ந்துள்ளனர். 

தேனீ ஈஸ்வர் எனும் மகா கலைஞனை பாராட்டியே ஆக வேண்டும். தலை வெட்டப்பட்டுள்ள சிலையின் மேல் உதிக்கும் சூரியனை வைத்து ஒரு ஷாட் வரும். இப்படி பல காட்சிகளில் நம் விழிகளுக்கு விருந்தளித்திருப்பார். கலை பணிகள் செய்த இராமலிங்கம் கைக்கு காப்பு தான் போடு வேண்டும். ஒரு கிராமத்தையே உருவாக்கி அதில் உள்ள வீடுகளை, வீதிகளை நம் கண் முன் கொண்டு நிறுத்தியுள்ளார். சந்தோஷ் நாராயணன் எனும் இசை கலைஞனை புகழ வார்த்தைகளை தேட வேண்டும். எதார்த்த இசையை பதார்த்தமாக படத்திற்கு சேர்த்துள்ளார். கண்டா வரச்சொல்லுங்க, தட்டான் தட்டான் பாடல் செவிகளுக்கு தேனூட்டுகிறது. உட்றாதீங்க எப்போவ் எனும் பாடல் மட்டும் சற்று பெப்பி மூடில் இருந்தது. எடிட்டர் செல்வாவின் கட்ஸ் எதார்த்த சினிமாவின் பக்குவத்தை காண்பித்தது. 

லால்....பேமன் எனும் பாத்திரத்தில் தனுஷுக்கு ஈடாக நடித்துள்ளார். அன்பில் கூட கம்பீரம் தெரியும் அப்படி ஒரு நடிப்பு. நட்டி..காவல் அதிகாரி கண்ணபிரானாக வந்து கதிகலங்க வைத்துள்ளார். நட்டியின் பார்வையில் கூட வெறி தெரிகிறது. சதுரங்க வேட்டையில் ஒரு பரிமாணம் என்றால், கர்ணனில் வேறு ஒரு பரிமாணம். இரண்டாம் பாதியில் நட்டியின் காட்சிகள் மிரள வைக்கும். யோகிபாபு...காமெடியன் யோகிபாபுவை மறந்துவிடுங்கள், மகா நடிகன் யோகிபாபு எனும் பெயரை பெற்றுள்ளார். எமோஷனல் காட்சிகளில் கூட அமைதியாக ஸ்கோர் செய்துள்ளார் யோகிபாபு. படத்தில் குதிரை வைத்திருக்கும் சிறுவன் நம்மை பல இடங்களில் ஆச்சர்யப்படுத்துவார். இரண்டாம் பகுதியில் வரும் காவல் நிலைய காட்சிகள் ரசிகர்களுக்கு எனர்ஜி பூஸ்டர். 

தரம் என்றால் தாணு. சரியான படத்தை தரமாக கொண்டு சேர்ப்பதில் அவருக்கு நிகர் அவர் தான். கதையின் மேல் நம்பிக்கை வைத்த அவருக்கு சபாஷ். 

கர்ணன் என்றால் கொடை வள்ளல் என்பார்கள்.. இந்த கர்ணன் படை வள்ளல். "வாள் தூக்கி நின்னான் பாரு, வந்து சண்ட போட்ட எவனும் இல்ல"...ஒற்றை வார்த்தையில் கூறவேண்டுமானால் கர்ணன் - காவல் தெய்வம்.