இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 2010-ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் களவாணி.விமல்,ஓவியா,சரண்யா,இளவரசு உள்ளிட்டோரின் எதார்த்த நடிப்பில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் இரண்டாம் பாகம் 9 வருடங்களுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் இருந்த கிராமத்து மன்வாசனையும், ஹீரோவின் களவாணித்தனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.இதனை அடுத்து இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.இந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்.

ஊரில் வேலையின்றி சுற்றித்திரியும் நாயகன் அந்த ஊரில் நடக்கும் பஞ்சாயத்து எலெக்ஷனில் ஊரில் இருக்கும் இரு பெரிய வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகிறார்.எலெக்ஷனில் தோற்றால் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் போட்டியிடும் நாயகன் வெற்றி பெற்றாரா இல்லை ஊரை விட்டு வெளியேறுகிறாரா என்பது மீதிக்கதை.

படம் ஆரம்பிக்கும் போதே முதல் பாகத்தின் முழுத்தொடர்ச்சி இல்லை என்பதோடு துவங்குகிறது இந்த படம்.இயக்குனர் சற்குணத்தின் அக்மார்க் டிரேட்மார்க்குகளான கிராமத்து மண்வாசனை,விசேஷங்கள் என்று நம்மை கிராமத்துக்கே அழைத்து செல்கிறார்.கதாநாயகன் விமல் முதல் பாகத்தில் பார்த்தது போலவே அதே அப்பாவித்தனத்தோடும்,அதே களவாணித்தனத்தோடும் திரையில் தோன்றுகிறார்.ஓவியா வழக்கம் போல் தமிழ் சினிமாவின் பார்முலா ஹீரோயினாக வந்து செல்கிறார்.மேக்கப் படத்திற்கு பொருந்தவில்லை மிகவும் செயற்கையாக இருந்தது.

RJ விக்னேஷ்காந்த் மற்றும் கஞ்சா கருப்பின் காமெடி சில இடங்களில் மட்டுமே எடுபட்டது படத்திற்கு பலவீனம்.சரண்யா,இளவரசு இருவரும் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை கச்சிதமாக செய்துள்ளனர்.படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இருந்தாலும் படத்தின் பாடல்கள் மனதில் நிற்கவில்லை.சற்குணம் தனக்குரிய வேலையை சரியாக செய்துள்ளார் என்றாலும் முதல் பாகத்தில் இருக்கும் ஏதோ ஒன்று குறைகிறது.

கிராமத்து அழகை அப்படியே நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறார் படத்தின் கேமராமேன் மாசாணி.எடிட்டர் ராஜா முஹம்மத் இன்னும் சில காட்சிகளை நீக்கியிருந்தால் படத்தின் வேகத்தை பாதிக்காமல் இருந்திருக்கும்.பாடல்கள் பொருத்தபப்ட்ட இடம் படத்திற்கு செட் ஆகவில்லை.முதல் பாகத்தில் இருந்த எதார்த்தம் படத்தின் பல இடங்களில் மிஸ் ஆனது படத்திற்கு மிகப்பெரும் மைனஸ் ஆக இருக்கிறது.முகம் சுழிக்க வைக்கும் காமெடி காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

கிளைமாக்ஸ் காட்சி நடக்கும் எலெக்ஷன் காட்சி சினிமாவுக்கு வேண்டுமானால் ஓகேவாக இருந்தாலும் மக்களை முட்டாளாக்கும் விதமாக இருப்பது வேதனை.நமக்கு எப்போதும் தெரிந்த ஹீரோ வில்லன் மோதும் கதை என்றாலும் அதனை இன்னும் கொஞ்சம் நன்றாக கையாண்டிருந்தால் நல்ல படமாக வந்திருக்கும்.படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை எதிர்பார்ப்பை எகிற வைப்பது போல் எந்த சீனும் இல்லாதது படத்திற்கு மைனஸ்.