உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரே 19 வயது மகளை அவரது காதலனுடன் சேர்த்து எரித்துக் கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாண்டா மாவட்டத்தில் தான், இப்படியொரு கொடுமையான சம்பவம் அரங்கேறி உள்ளது.

பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த போலா என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். 

நீண்ட காலமாக இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, காதலர்கள் எப்போதும் போல, வெளியே சுற்ற முடியவில்லை. இதனால், ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமல் தவித்து வந்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து, பிரியங்கா வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்துள்ளது. அப்போது, தன் காதல் விசயத்தை, பிரியங்கா தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். 

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாமல் அவரது வீட்டில் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், “இனி அந்த இளைஞரோடு பேசினால், அவ்வளவு தான்” என்றும், பிரியங்காவை, அவரது பெற்றோர் மற்றும் சகோதரன் உள்ளிட்டோர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஏங்கித் தவித்திருந்த நிலையில், தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் விசயம் குறித்து, பிரியங்கா தன் காதலனிடம் கூறி உள்ளார். இதனால், காதலன் மிகவும் நொந்துகொண்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, அடுத்த சில நாட்களில், பிரியங்கா வீட்டில் அவரது பெற்றோர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தனர். அப்போது, பிரியங்கா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இது தொடர்பாக, பிரியங்கா தனது காதலனிடம் கூறி உள்ளார். இதனையடுத்து, காதலன் போலா பிரியங்கா வீட்டிற்கு வந்துள்ளார். 

காதலர்கள் இருவரும் பிரியங்கா வீட்டில் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, காதலன் போலா வந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து, பிரியங்காவின் பெற்றோருக்கும், சகோதரருக்கும் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விரைந்து வந்த பிரியங்காவின் பெற்றோர், அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் காதலர்கள் இருவரையும், அந்த அறையிலேயே உள்ளே 
வைத்து, வெளியே பூட்டி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த அறைக்குள் மண்ணெண்ணையை அறைக்குள் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இதில், காதலன் போலா மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் தீயில் எரிந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், பிரியங்காவின் பெற்றோர், அவரது சகோதரர் மற்றும் உறவினர் என மொத்தம் 4 பேரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரயாங்கின் உறவினர்கள் மேலும், 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களையும் தேடி வருகின்றனர். அத்துடன், தலைமறைவாக உள்ள அந்த 5 பேரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், கைது செய்யப்பட்ட பிரியங்காவின் பெற்றோர், அவரது சகோதரர் மற்றும் உறவினர் என 4 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், காதலர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. ஆனாலும், மகள் பிரியங்காவை வேறொருவருக்குத் திருமணம் செய்து கொடுக்க அவரது 

பெற்றோர் முடிவு செய்திருந்த நிலையில், காதலை கை விடாமல் தொடர்ந்ததாகவும், வீட்டிற்கே வந்து காதலித்த கோபத்திலுமே பெற்றோரே மகளை காதலனுடன் சேர்த்து வைத்து எரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம்,  உத்தரப்பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.