காங்கிரஸ் கட்சியிலிருந்த சச்சின் பைலட்டை, ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநிலக் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கியுள்ளதாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். மேலும், இவருக்கு  ஆதரவாக இருந்த, இரண்டு ராஜஸ்தான் அமைச்சர்களும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொடர்பான நெருக்கடி நிலவும் தற்போதைய சூழலில் சில மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் ஆளும் கட்சிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது ராஜஸ்தான்  மாநிலத்தில் இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவில் முதல்வர் பதவிக்காக அசோக் கெல்லாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அசோக் கெல்லாட்டுக்கு முதல்வர் பதவியும், சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவியும் கிடைத்தது. இருப்பினும், இருவருக்கும் இடையே தொடர்ந்து அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்பட்டது. 

மேலும், சச்சின் பைலட் பாஜகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதன்படி, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக முயல்வதாகவும் முதல்வர் அசோக் கெல்லாட் குற்றம் சாட்டினார். இதற்கு பாஜக-வும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது, பா.ஜ.கவுடனான பிரச்னை மட்டும் அல்லாது அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான காங்கிரஸின் உள்கட்சிப் பிரச்னையும் தீவிர கட்டத்தை எட்டியுள்ளது. 

தற்போது, சச்சின் பைலட், தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார்.  இதனால், முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்குமா? நிலைக்காதா? என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. 

காங்கிரஸ் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், 'கெல்லாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசு நிலையாக உள்ளது. இந்த அரசு முழுமையாக ஆட்சியை நடத்தும். கடந்த 48 மணி நேரத்தில் சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் பலமுறை ஆலோசனை நடத்தியுள்ளது. அவருக்காகக் காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்திருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாஜக மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை நேற்று முன்தினம் அவர் சந்தித்துப் பேசினார். இதனால் சச்சின் பைலட் பாஜக.வில் சேருவாரா என்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று ஜெய்ப்பூரில் நடந்த இரண்டாவது சட்டமன்றக் கூட்டத்திலும் இரண்டும் அமைச்சர்களுடன் மொத்தம் 18 பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும், எம்.எல்.ஏ.க்களை கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு தன் பக்கம் இழுத்த குற்றத்திற்காக சச்சின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

மேலும், காங்கிரஸிலிருந்து சச்சின் பைலட்டை நீக்குவதற்கு எம்.எல்.ஏ.கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து  இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகக் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, ராஜஸ்தானின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார். முதல்வர் அசோக் கெஹ்லோட்டின் (Ashok Gehlot) அமைச்சரவையில் டோட்டாஸ்ரா மாநில அமைச்சராகவும் உள்ளார். இளைஞர் காங்கிரஸ் அணியின் புதிய தலைவராக இளம் எம்.எல்.ஏ, கணேஷ் கோக்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் பதவி கிடைக்காததாலும், கட்சியில் முக்கியத்துவம் கிடைக்காததாலும் அதிருப்தியிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அப்போதே சச்சின் பைலட் பற்றிய பேச்சுகளும் அடிபட்டன. ஆனால், அவர் தனிக்கட்சி ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பைலட் முகாமிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் விஸ்வேந்தர் சிங், ரமேஷ் மீனா மற்றும் தீபந்தர் சேகாவத் ஆகியோர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் 'சச்சின் பைலட்டின் தலைமையில் கட்சியைப் பலப்படுத்தி, ராஜஸ்தானில் ஆட்சியைக் கொண்டுவரக் கடந்த 6 ஆண்டுகளில் நாங்கள் கடினமான முயற்சிகளை மேற்கொண்டோம். மாநிலச் சட்டசபையில் மிக குறைந்த தொகுதியை வைத்திருந்த நிலையில், கட்சி ஆட்சியைப் பிடிக்க நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். எங்கள் தலைவர் சச்சின் பைலட்டை பகிரங்கமாக அவமானப்படுத்துவது எங்களால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதற்குக் காரணமானவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால், தற்போது ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- பெ.மதலை ஆரோன்