கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிக் கல்வியைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.  இருப்பினும், கல்வியை எப்படியாவது மாணவர்களுக்கு கொன்டு செல்ல வேண்டும் என்பதில் கல்வி நிலையங்கள் ஆர்வமாக இருக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்து வந்தாலும், கல்வி கற்பிக்க வேண்டும் என்பதால் அரசும் இதற்கு குறுக்கே நிற்கவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் ஒருகட்டத்துக்கு மேல் ஆன்லைன் வகுப்புகளின் பாதகங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. மொபைல் டவர் பிரச்னை தொடங்கி, ஆன்ட்ராய்டு பிரச்னை வரை பல புதிய பிரச்னைகள் எழத்தொடங்கிவிட்டன. ஆகவே கல்வி நிலையங்களை திறக்கக் கோரி வேண்டுகோள்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால், பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு தளர்வுகள் அறிவித்த மத்திய மாநில அரசுகள், பள்ளி திறப்பு இப்போதைக்கு இல்லை என்பதில் தீர்மானமாக இருக்கின்றன. காரணம், தொற்று நோய் அபாயத்தில் அனைவரையும் விட ஆபத்து அதிகம் நிறைந்தவர்களாக மாணவர்கள்தான் இருக்கின்றனர். பள்ளிகள் மட்டுமன்றி, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் கல்லூரிகளும் இன்னும் திறக்கப்படவில்லை. 

இதனால் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும் வழிமுறை முன்பைவிட வேகமாக துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஏழை எளிய மக்கள் - கிராமப்புற மாணவர்கள் - வசதியில்லாத கிராமப்புற மாணவர்கள் - அரசுப்பள்ளி மாணவர்கள் போன்றோர் ஆன்லைன் சேவை இல்லாத காரணத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வியை கேள்விக்குட்படுத்தியது. இவர்களுக்காகவாவது, கல்வி நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் எனக்கூறப்பட்டு வந்தது.

மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் காரே உள்ளிட்ட பலர் கடந்த முறை நடந்த கூட்டத்தின்போது, பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசித்திருந்தன. இந்தக் கூட்டத்தின் முடிவில் பேசிய அமித் காரே, ``கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே ஆன்லைன் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகளைத் தொடர முடிவு செய்யப்படும். கல்லூரி இறுதித்தேர்வுகள் நடப்பாண்டின் இறுதிக்குள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்து விட்டார்.

ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் இணைய வழிக் கல்வியைக் கூட முறையாகப் பெற முடியாமல் தவிக்கின்றனர் என்பதற்கான மாற்றாக அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. தமிழகத்தில், மாநில அரசு சார்பாக கல்வி தொலைக்காட்சி என்ற சேனல் அறிமுகப்படுத்தப்பட்டு, அது மாநிலம் முழுவதும் ஒளிபரப்படுவது, பாசிடிவ்வான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. இப்படியொரு நடைமுறை, நாடு முழுவதும் இருக்கிறதா என்றால், அது கேள்விக்குறிதான்.

இதுபற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள இந்தியாவில் உள்ள பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் பள்ளிக் கல்வி குறித்து ஆக்ஸ்பாம் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி குறிப்பிட்ட 5 மாநிலங்களில் 80 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்கள் எந்தவகையிலும் தங்களது பள்ளிக்கல்வியைத் தொடர முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்தில் இரண்டு ஆசிரியர்களுக்கு இணைய வழிக் கல்வியை மேற்கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், 20 சதவிகித அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே இணையவழிக் கல்வியைக் கற்பிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் பொதுமுடக்கக் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ஐந்து மாநிலங்களிலும் 65 சதவீத மாணவர்கள் மட்டுமே மதிய உணவைப் பெற்றுள்ளனர். அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 50 சதவிகித பெற்றோர்கள் வழக்கமானக் பள்ளிக்கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் 5 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் 80 சதவிகிதமான அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தகைய முறையிலும் கல்வியை பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.