பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், தேசிய புலானய்வு முகமை (என்.ஐ.ஏ) அல்கைதா பயங்கரவாதிள் என சந்தேகிக்கப்படும் சிலரை கைது செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, கேரளா மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து 9 பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில், மேற்கு வங்கத்தில் எட்டு பேரையும், கேரளாவில் மூன்று பேரையும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சில காலமாக மாநில அளவில் இந்த பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த இவர்கள்  திட்டமிட்டிருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் நிதியுதவியுடன் அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ஒரு குழுவை பிடிக்க கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த சோதனைகளைத் தொடர்ந்து சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

இந்த நிறுவனம் மேற்கு வங்கத்தில் எட்டு பேரையும், கேரளாவில் மூன்று பேரையும் கைது செய்தது. மேலும் சில டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியது.

தேசிய தலைநகர், மாநிலங்களுக்கு உள்ளே முக்கிய பகுதிகள் போன்ற பல இடங்களில் இவர்கள் தாக்குதல்களை நடத்துவதற்காக திட்டமிட்டிருந்தனர் எனக்கூறப்படுகிறது. பாகிஸ்தானை தளமாக கொண்ட அல்கைதா பயங்கரவாதிகள் சிலர், சமூக ஊடகங்கள் மூலம்,  இவர்களை மூளை சலவை செய்துள்ளனர். இவர்களின் மூலம், இந்தியாவின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தவும் தூண்டியது முதற்கட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த குழுவினர் தீவிரமாக நிதி திரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்க முயற்சிக்க புதுடெல்லிக்கு செல்ல திட்டமிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து என்.ஐ.ஏ தெரிவிக்கையில், “டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், ஜிஹாதி இலக்கியம், கூர்மையான ஆயுதங்கள், நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடல் கவசம், வீட்டில் தயாரிக்கக்கூடிய வெடிக்கும் சாதனங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை இவர்கள் வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம் - முர்ஷித் ஹசன், இயாகுப் பிஸ்வாஸ், மொசாரப் ஹுசைன், நஜ்முஸ் சாகிப், அபு சுஃபியான், மைனுல் மோண்டல், லியு இயன் அகமட், அல் மாமும் கமல், அதிதுர் ரஹ்மான். இவர்களையெல்லாம் தற்போது கைது செய்திருப்பதன் மூலம், நாட்டில் பல இடங்களில் நடந்திருக்க வேண்டிய குண்டு வெடிப்புகளை இந்தக் கைதிகள் மூலம் தடுத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

நான்கு நாள்களுக்கு முன்னர் (செப் 16), நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி,
``தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தனிநபர்கள் ஐ.எஸ் அமைப்பில்  சேர்ந்திருப்பது மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ``ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தனது சித்தாந்தத்தை பரப்புவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. அதில், இணைய அடிப்படையிலான சமூக ஊடக தளங்களை பெரும்பாலும் பயன்படுத்துகிறது. சைபர்  முகமைகள் இது தொடர்பாக உன்னிப்பான கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன. சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

சர்வதேச அளவிலான சில அமைப்புகளை இந்தியா தடை செய்துள்ளது.   மற்றும் அதன் அனைத்து கிளை அமைப்புகளும், பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்டு, மத்திய அரசாங்கத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967க்கான முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என தென்னிந்தியா முழுவதும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருப்பது தொடர்பான 17 வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு  பதிவு செய்துள்ளது.  மேலும் குற்றம் சாட்டப்பட்ட 122 பேரை கைது செய்துள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது" என்றார்.

மத்திய அமைச்சகத்தின் இந்த கருத்து வெளியாகிய சில நாள்களில், இன்று இப்படியொரு செய்தி வந்திருப்பது, ஒன்றுக்கொண்று பிணைப்பு உடையதாகவே கருதப்படுகிறது. இருப்பினும் இப்போது கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதால், பொறுத்துதான் விளைவை நாம் பார்க்க வேண்டியுள்ளது.