பெங்களூருவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தனது தந்தைக்கு 5 பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக, அவரது மகன் எழுதிய 27 பக்க கடிதம் போலீசாரின் கையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு பேடரஹள்ளி அருகே திகளரபாளையாவை சேர்ந்த சங்கர் என்பவர், அந்த பகுதியில் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாரதி, மகள்கள் சிஞ்சனா, சிந்துராணி, மகன் மதுசாகர் ஆகிய 4 பேரும் ஒரே நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டனர். 

அப்போது, சிந்துராணியின் 9 மாத குழந்தையும் பசியால் இறந்திருந்தது. இது குறித்து பேடரஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படியாக, ”ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை மற்றும் பேரக் குழந்தை சாவுக்கு தனது மனைவி பாரதியே காரணம்” என்று, போலீசாரிடம் சம்மந்தப்பட்ட சங்கர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால், நேற்று முன்தினம் சங்கர் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது, “அவரது மகள்கள் மற்றும் மகன் எழுதி வைத்திருந்த 27 பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதங்கள்” போலீசாரின் கையில் சிக்கி உள்ளது. 

தற்கொலைக்கு முன்பு அவர்கள் எழுதிய அந்த கடிதத்தில், “குடும்பத்துடன் தற்கொலை செய்வதற்கு தந்தையின் கள்ளத் தொடர்பே காரணம்” என்று, அதில் எழுதப்பட்டு இருந்தது போலீசாருக்கு தெரிய வந்து.

முக்கியமாக, சங்கரின் மகன் எழுதிய தற்கொலை கடிதத்தில், “எனது தந்தைக்கு 5 பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், வீட்டின் அருகே வசித்து வந்த தினக் கூலி வேலை செய்து வந்த விதவைப் பெண்ணுடன் பண ஆசைகாட்டி கள்ள உறவில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும்” குறிப்பிட்டு இருந்தார். 

அத்துடன், “எங்களது வீட்டில் வாடகைக்கு வந்த ஒரு பெண்ணுடன் என் தந்தை கள்ள உறவில் இருந்தார் என்றும், இவர்கள் தவிர எங்கள் பகுதியைச் சேர்ந்த நர்ஸ் ஒருவரை, தனக்கு உதவியாளர் வேண்டும் என்று கூறி, அவரைத் தன்னுடனேயே வைத்து கொண்டார்” என்றும், அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இப்படி பண ஆசை காட்டி 5 பெண்களை தங்கள் வலையில் என் தந்தை சிக்க வைத்து இருந்தார் என்றும், இதற்காக ராஜாஜி நகரில் இருக்கும் அலுவலகத்தை அவர் பயன்படுத்தி வந்தார்” என்றும், கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது. 

குறிப்பாக, “சம்மந்தப்பட்ட 5 பெண்களுடன் என் தந்தை நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என்னிடம் இருப்பதாகவும்” அவர் அதில் கூறியிருந்தார்.

“5 பெண்களின் கள்ள உறவினால் என் தாய் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், தன் தாயை மன ரீதியாக உடல் ரீதியாகவும் எனது தந்தை கொடுமைப்படுத்தி வந்தார்” என்றும், அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மிக முக்கியாக, “மகள்கள் என்று கூட பார்க்காமல் தனது மகள்களுக்கும் அவர் தொல்லை கொடுத்து வந்ததால் தான், நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தோம்” என்றும், அந்த கடிதத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த கட்டிடத்தை கைப் பற்றி போலீசார் சங்கரிடம் தீவிரமாக விசாரித்த நிலையில், இவர் இதனை ஏற்க மறுத்துவிட்டார்.

மேலும், “என் மகன் என்னைத் திட்டமிட்டு சிக்க வைக்க இப்படி ஒரு கடிதம் எழுதி இருப்பதாகவும்” அவர் கூறியுள்ளார். அதனால், சங்கரிடம் போலீசார் மீண்டும் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.