உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், மூட நம்பிக்கையின் உச்சமாக பக்தர் ஒருவர், தன்னடைய நாக்கை வெட்டி காணிக்கையாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

உத்தரப் பிரதேசம் மாநிலம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆத்மரம் யாதவ் என்பவர், தினசரி கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

இவருக்கு மற்றவர்களைக் காட்டிலும் கடவுள் பக்தி அதிகம் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், நேற்றையத் தினம், அந்த பகுதியில் உள்ள தேவி மாதா கோயிலுக்குச் சென்ற ஆத்மரம் யாதவ், தன்னுடைய நாக்கை வெட்டி தேவி மாதா சிலைக்கு முன்பு வைத்து உள்ளார். இதனை, அந்த கோயிலில் சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்த சக பக்தர்கள், இதனைப் பார்த்து, கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, யாதவை பிடித்த சக பக்தர்கள், அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், யாதவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால், அதற்கு யாதவ் மறுப்பு தெரிவித்து உள்ளார். ஆனால், இதனை ஏற்க மறுத்த போலீசார், அவரை சமாதானம் செய்து, சிகிச்சை அளிக்கும் படி, மருத்துவர்களை அவர்கள் வேண்டிக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, அவரின் நாக்கை மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர். 

அத்துடன், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கோயிலில் இருந்த சக பக்தரான சியாம் சுந்தர் கூறும்போது, “யாதவ், நாக்கை வெட்டிக் கொள்வதற்கு முன்பே, தனக்குள் கடவுள் புகுந்து விட்டதாக” கூறினார். 

“கடவுளுக்குப் பரிசாகத் தனது தலையை வெட்டி காணிக்கையாக செலுத்த விரும்பியதாகவும், யாதவ் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். 

“ஆனால், இதற்கு அவரின் தாயார் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக, தனது நாக்கை வெட்டி கடவுளின் சிலைக்கு முன்பு யாதவ், காணிக்கையாக வைத்துள்ளார்” என்று, அவர் கூறினார்.

இந்தியா, மூட நம்பிக்கையில் மூழ்கி இருந்த காலமெல்லாம் மலையேறிப் போய், இன்றைய டிஜிட்டல் வீர நடை போட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனாலும், இன்றைய நவீன யுகத்திலும் மூட நம்பிக்கையால் இந்தியாவில் அதுவும் வட மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கவலைத் தெரிவித்து உள்ளனர்.

அதே போல், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஜார்கண்ட் மாநிலத்தில் காணாமல் போன மருமகள் மீண்டும் கிடைக்க வேண்டி, மாமியார் ஒருவர் தனது நாக்கை வெட்டி சாமிக்கு காணிக்கையாகக் கொடுத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து மாமியார் லட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் தன் மனைவியால் இன்னும் பேச முடியவில்லை” என்றும், அவரது கணவர் கூறியிருந்தார். இந்த சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அதே போன்ற சம்பவம் இந்த முறை உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.