தமிழில் நடிகர் சூர்யா தொகுத்து நடத்தி வந்த ஒரு வார்த்தை ஒரு கோடி நிகழ்ச்சியின் ஒரிஜனல் வெர்ஷனான `கெளன் பனேகா கரோர்பதி' என்னும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை வட இந்தியாவில் நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கி நடத்தி வருகிறார். 

இந்நிகழ்ச்சியின் 12-வது சீசனான கேபிசி 12,  கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி துவங்கப்பட்டது. இன்ஃபோடெய்ன்மெண்ட் எனப்படும் தகவல்களை தெரிந்துகொள்ளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான இதில் மனுஸ்மிருதி குறித்து கேட்கப்பட்ட கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஒளிபரப்பின் போது எவ்வித சலசலப்பையும் ஏற்படுத்தாத இந்த கேள்வி, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இக்கேள்வியின் நோக்கம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக அமிதாப் பச்சன் மீதும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மகசேசே விருது பெற்றவரும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான அந்தோலன் கரம்சாரி அமைப்பு நிறுவனருமான பெஸ்வாடா வில்சனும், நடிகர் அனூப் சோனியும் கலந்துகொண்ட அந்த கரோர்பதி நிகழ்ச்சியில், கேட்கப்பட்ட கேள்வி - ``1927-ஆம் ஆண்டு, டிசம்பர் 25-ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் எரித்த புத்தகம் எது?" என்பதுதான். இந்தக் கேள்வி கேட்கப்பட்டு இதற்கு விஷ்ணு புராணம், பகவத் கீதை, ரிக் வேதம், மனு ஸ்மிருதி என்னும் நான்கு ஆப்ஷன் பதில்களும் தரப்பட்டன.

இதில், ``எந்த புத்தகம் எரிக்கப்பட்டது?" என்னும் கேள்வி, மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக, தற்போது போட்டி நிகழ்ச்சியின் நெறியாளரான அமிதாப் பச்சன் மீதும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் லக்னோவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த கேள்வியை இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் ட்விட்டர் வாசிகள், இடதுசாரி கொள்கைகளை பரப்பும் நிகழ்ச்சி என விமர்சித்து கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். இவையாவும், சமூகவலைதளத்தில் சர்ச்சையை எழுப்பி வருகின்றது.

இதுதொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி, ‘மைக்ரோ பிளாக்கிங்’ தளமான ட்விட்டரில் அந்த நிகழ்ச்சியின் ஒரு கிளிப்பைப் பகிர்ந்துகொண்டு, ‘இந்த டிவி நிகழ்ச்சியில் இடதுசாரிகளின் சிந்தனைகள் திணிக்கப்பட்டுள்ளது. அப்பாவி குழந்தைகளே, கலாசாரப் போர்கள் எவ்வாறு வெற்றி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது ஒருவகையான ‘குறியீடு’முறை என்று அழைக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார். 

அமிதாப்பச்சன் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப் பதிந்ததவர், இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் ரிஷி குமார் என்பவர்தான். இவர், உத்தரபிரதேச மாநிலம், லக்னோ அடுத்த திரிவேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அமிதாப்பச்சன் மீதும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

இடதுசாரிகள் தரப்பில், `கேள்வி பதில் கேட்கப்படும் நிகழ்ச்சியில், இதுவொரு பொது அறிவு கேள்வியாகவே கேட்கப்பட்டுள்ளது' என்றும், `அம்பேத்கரின் வாழ்வில், அவர் மனுஸ்மிரிதி எரிப்புக்காக எடுத்த முன்னெடுப்பு, மிகமுக்கியமானது என்பதாலும், அம்பேத்கர் ஒரு சட்டமேதை என்பதாலும், இக்கேள்வியானது வரலாற்றில் தவிர்க்கமுடியாத விஷயம்' என்றும் கூறப்பட்டு வருகிறது.

மனுஸ்மிரிதியில் பெண்களைக் குறித்து இழிவான கருத்துக்கள் இருப்பதாக, மேற்கோள் காட்டிப் பேசிய விசிக கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் மீது, பெண்களை இழிவுபடுத்தியதாக மிகச்சமீபத்தில் தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது இங்கே நினைவுகூறத்தக்கது.