இளம் பெண்ணின் மார்பை தொட்டு அறுவறுப்பாக நடந்துகொண்ட இளைஞனை விடாமல் துரத்திய இளம் பெண், அவரின் ஸ்கூட்டியை சாக்கடையில் தள்ளி விட்டு 
சிங்கப்பெண்ணாக மாறிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசாம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியைச் சேர்ந்த பாவனா காஷ்யப் என்ற இளம் பெண், கடந்த 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் அந்த பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான சாலை ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், தனது வாகனத்தில் இருந்தபடியே, அந்த இளம் பெண்ணிடம் ஒரு முகவரியைச் சொல்லி, வழி கேட்டிருக்கிறார்.

ஆனால், அந்த முகவரி தெரியாத நிலையில், “எனக்குத் தெரியவில்லை. நீங்கள், வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள்” என்று, இந்த பெண் பதில் கூறியிருக்கிறார். 

அப்போது, திடீரென்று அந்த இளம் பெண்ணின் மார்பகங்களைத் தொட்டு, மிகவும் அறுவறுப்பான முறையில் அந்த இளைஞன் நடந்து கொண்டிருக்கிறார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், சட்டென்று சுதாரித்துக்கொண்டு, அவனுடன் மல்லுக்கட்டி உள்ளார்.

இதனால், அந்த இளைஞன், தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றிருக்கிறான். ஆனால், அந்த இளம் பெண் சிங்கப்
பெண்ணாக மாறி, தனது முழு பலத்தையும் காட்டி அந்த நபரின் இருசக்கர வாகனத்தை பின் பக்கமாக டயரை மட்டும் அப்படியே மேலே தூக்கி இருக்கிறார். இதன் காரணமாக, அந்த நபரால் அங்கிருந்து தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பித்துச் செல்ல முடியவில்லை.

இப்படியாக, அந்த இளைஞனுடன் மல்லுக்கட்டிய அந்த சிங்கப் பெண், ஒரு வழியாக அவனின் இருசக்கர வாகனத்தை அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளி விட்டுள்ளார். 

தன்னுடைய வாகனம், சாக்கடைக்குள் விழுந்துவிட்டதால், அந்த இளைஞனால் உடனடியாக அங்கிருந்தும் தப்பச் செல்ல முடியாமல் அப்படியே, அந்த பெண்ணிடம் மாட்டிக்கொண்டார்.

அப்போது, அந்த வழியாக வந்த சிலர், இளம் பெண் பாவனாவுக்கு துணையாக பேச, அதில் ஒருவர் அங்கு நடந்த இந்த சம்பவங்களை வீடியோவாக எடுத்தார்.

அப்போது, அந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மிரட்டி விசாரித்த நிலையில், அவனின் பெயர் மதுசனா ராஜ்குமார் என்பதும், அவன் கவுகாத்தியின் பஞ்சபாரி பகுதியைச் சேர்ந்தவன் என்பதையும் கண்டுபிடித்தனர்.

மேலும், இது குறித்து அங்குள்ள காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், அந்த இளைஞனைக் கைது செய்து
அழைத்துச் சென்றனர்.

அதன் தொடர்ச்சியாக, தனக்கு நேர்ந்த இந்த பாலியல் கொடுமையை சொல்லி, அந்த பெண் துணிச்சலுடன் செயல்பட்டதை வீடியோவாக பேசி வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.