பாஜக ஆட்சி நடத்தி வரும் ஹரியானாவில் 100 விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த விவசாயிகள் போராட்டம் கடந்த 5 மாதங்களையும் தாண்டி, 200 நாட்களைக் கடந்து, 250 நாட்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

டெல்லி எல்லையான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் பகுதிகள் மற்றும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் வேளாண் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதற்கு ஆதரவாக, ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தில் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. 

அப்போது அந்த வழியாக காரில் சென்றுகொண்டிருந்த ஹரியானா துணை சபாநாயகர் ரன்வீர் கங்வா மீது, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் திடீரென கல்வீசி தாக்கியதாகக் காவல் துறை குற்றம்சாட்டி உள்ளது. இந்த தாக்குதலில், சபாநாயகர் ரன்வீர் கங்வாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், அவர் காயமின்றி உயிர் தப்பியதாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தால், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 100 விவசாயிகள் மீதும், தேசத்துரோக சட்டத்தின் கீழ், அந்த மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். 

ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தில் கடந்த 11 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், அந்த மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தான், 100 விவசாயிகள் மீதும் தற்போது தேசத்துரோக வழக்வும், விவசாய சங்கத்தின் இரு தலைவர்கள் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹரியானா காவல் துறை கூறியுள்ளது.

போலீசாரின் இந்த குற்றச்சாட்டுக்களை அந்த மாநிலத்தின் சம்யுக்த் கிஷன் மோச்சா விவசாயச் சங்கம், முற்றிலுமாக மறுத்துள்ளது. 

மேலும், “இது போலீசாரின் திட்டமிட்ட சதி” என்றே, அந்த விவசாயச் சங்கம் தங்களது அறிக்கையில் காவல் துறை மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. இதனால், ஹரியானா மாநில அரசு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளது.

இதனிடையே, “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இந்தியாவில் தேசத்துரோக சட்டத்தைக் கடைப்பிடிப்பது ஏன்?” என்று, இன்று காலை, மத்திய அரசுக்கு உச்சம் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தான், ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அப்பாவி விவசாயிகள் மீது ஹரியானா மாநில போலீசார், தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு, நாடு முடிவதிலிருந்தும் தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. எனினும், இந்த எதிர்ப்புகளை சமாளிக்க ஹரியானா மாநில பாஜக அரசு தயாராகி வருகிறது என்றும் கூறப்படுகிறது.