அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் நடிகை ஏமி டோரிஸ் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் தற்போது சூடு பிடித்து உள்ளது. உலக வல்லரசு நாடுகளில் முதன்மையாகத் திகழும் அமெரிக்க அதிபர் தேர்தலைத் தான் ஒட்டு மொத்த உலக நாடுகளும் தற்போது உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்கின்றன.

இதில், அமெரிக்காவின் பழமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளராக தற்போது அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப்பே மீண்டும் போட்டியில் நிற்கிறார். அதே போல், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால், அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்து உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தற்போது 74 வயது ஆகும் நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பைடன்க்கு தற்போது 78 வயது ஆகிறது. ஜோ பைடன், இந்த முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதேபரபாக அவர் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த அரசியல் பிரச்சாரங்களுக்கு மத்தியல், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் நடிகை ஏமி டோரிஸ், பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அதாவது, கடந்த 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் நகரில் நடந்த டென்னிஸ் தொடரின் போது, மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராகத் திகழ்ந்த டொனால்ட் ட்ரம்ப், அந்த விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் முன்னாள் மாடல் நடிகை ஏமி டோரிஸ் என்பவரும் கலந்துகொண்டார்.

அப்போது, “தற்போது அதிபராக உள்ள டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், என்னுடைய அனுமதி இல்லாமல் எனக்கு அவர் முத்தம் கொடுக்க முயன்றதாகவும்” பரபரப்பு குற்றச்சாட்டை அவர் சுமத்தி உள்ளார். 

இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த நடிகை ஏமி டோரிஸ், “என்னுடைய விருப்பத்திற்கு மாறாகவே, டிரம்ப் என்னை மிகவும் இறுக்கமாகக் கட்டி அணைத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக அவர் எனக்கு முத்தமிட்டார்” என்றும், கூறியுள்ளார். 

“அந்த தருணத்தில், அவரது பிடியில் இருந்து நான் வெளியே வர முயன்ற போது, அது முடியாமல் போனது” என்றும், குற்றம்சாட்டி உள்ளார். 

இதனால், நடிகை ஏமி டோரிஸ் அளித்துள்ள பேட்டி, அமெரிக்க ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதால், தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடிகை ஏமி டோரிஸின் இந்த பாலியல் குற்றச்சாட்டு, அதிபர் டிரம்ப்புக்கு தற்போது நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், கடந்த 23 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் குறித்து, தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் முன்னர் மாடல் நடிகை புகார் அளித்து இருப்பது, அந்நாட்டு அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அதிபர் டிரம்ப், “என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகத் திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் இவரை ஏவி விட்டிருப்பதாக” தெரிவித்தார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு எதிராக இப்படி பாலியல் குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறையல்ல. இது வரை 12 க்கும் மேற்பட்ட பெண்கள், இது போன்று பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.