கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாறாக தினமும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. தமிழ் திரையுலகில் கிராமப்புற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ராமராஜன். நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. 

அரசியல் தலைவர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிப்பதை தினமும் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நேற்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 8 ஆயிரத்து 600 -ஐ தாண்டியுள்ள நிலையில் நாளுக்கு நாள் நோய் திவீரம் அடைந்து வருகிறது. இந்த நோய்க்கு பிரபலங்களும் தப்பவில்லை. 

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ராமராஜனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் கிங்க்ஸ் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. ராமராஜன் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற முடிவு செய்திருக்கிறார். ராமராஜனின் வீட்டில் இருக்கும் ஏசியை பழுதுபார்க்க அண்மையில் மெக்கானிக் வந்தாராம். அதன் பிறகே அவர் தனக்கு மூச்சு விடுவதில் சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மண்ணுக்கேற்ற பொண்ணு, மருதாணி என இரண்டு படங்களை இயக்கி ஒரு இயக்குனராகவே ராமராஜன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். 1980 முதல் இரண்டாயிரம் வரை தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்திருந்த ராமராஜனின் நம்ம ஊரு நல்ல ஊரு, நம்ம ஊரு நாயகன், தங்கமான ராசா, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் என ராமராஜனின் மெகா ஹிட்ஸ் படங்களுக்கு தமிழக கிராமங்களில் இல்லாத ரசிகர்களே இல்லை எனலாம்.

இரண்டாயிரமாவது ஆண்டிற்குப் பின்னர் மாற்றம் பெற்ற தமிழ் சினிமாவில் தன்னை அப்ட்டேட் செய்து கொள்ளாமல் இருந்தவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா உயிர் இழந்தார். தெலுங்கு திரையுலகில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார்கள். 

தற்போது சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகபாபுவுக்கும், இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சிங்கீதம் சீனிவாசராவ் மற்றும் நாகபாபு ஆகியோர் மருத்துவர்களின் அறிவுரையின்படி தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தனக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் நலமாக இருப்பதாக சீனிவாசராவ் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பிரச்சனை எப்பொழுது தீரும், இந்த 2020ம் ஆண்டு எப்பொழுது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கை தகர்த்தாலும், இந்த வைரஸ் முற்றிலும் இல்லாமல் இருந்தால் தான் மக்களுக்கு இயல்பு நிலை.