10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி ஜூன் 1 ஆம் தேதி தொடங்குமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்று முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

SSLC Public Exam i TamilNadu - Sengottaiyan

இதனிடையே, ஊரடங்கு முடிந்த மறுநாளே, அதாவது ஜூன் 1 ஆம் தேதியே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழகத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு, எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

எனினும், “தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. 

அதுபோல், “தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் சானிடைசர், சோப், கை கழுவுவதற்கான நீர் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டள்ளது. 

SSLC Public Exam i TamilNadu - Sengottaiyan

“தேர்வு எழுதும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர்களைத் தொடர்பு கொண்டு, தேர்வு கால அட்டவணை குறித்து ஆசிரியர்கள் விளக்க வேண்டும்” எனவு, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. 

இதனிடையே, முன்னதாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், திட்டமிட்டபடி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதிப்படத் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வைத் திட்டமிட்டபடி ஜூன் 1 ஆம் தேதி தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகே, உறுதியான முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.