கடந்த ஜூன் 19ஆம் தேதி சாத்தான்குளத்தில் மொபைல் கடை வைத்திருந்த ஜெயராஜ், அவரது மகன் ஃபெனிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடையைத் திறந்து வைத்திருந்ததாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் அவர்கள் தாக்கப்பட்டதால் பின் கோவில்பட்டி கிளைச் சிறையிலும், மருத்துவமனையிலும் மரணம் அடைந்தனர். 

இந்த விவகாரம் ஐ.நா வரை உலுக்கியெடுத்தது. தமிழக அரசு இந்த வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தது. ஆயினும் மதுரை நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சிபிஐ பொறுப்பெடுக்கும் வரை விசாரணை தாமதத்தை தவிர்க்க சிபிசிஐடி விசாரணை நடத்தியது. இதில் கைது செய்யப்பட்ட 10 போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
விசாரணையின் முக்கிய அங்கமான தடய அறிவியல் துறையினரின் விசாரணை இந்த வழக்கில் தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சிபிஐ, சிபிசிஐடி ஆகியவை சீல் வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையை மதுரை உயர் நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 7) தாக்கல் செய்திருக்கின்றன.

இதுகுறித்து நீதிபதிகளிடம் தெரிவித்த சிபிஐ தரப்பு, “கொரோனா நிலவரம் காரணமாக மத்திய தடய அறிவியல் ஆய்வகம் (சி.எஃப்.எஸ்.எல்) குழுவினரால் இதுவரை சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை, அவர்கள் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் குழுவினர்தான் இந்த வழக்கிலும் தடயவியல் ஆய்வுகள் செய்ய இருக்கிறார்கள். எனவே அதற்கான கால அவகாசம் வேண்டும்” என்று கோரியது.

இதையடுத்து இந்த வழக்கை செப்டம்பர் 22ஆம் தேதி வரை ஒத்திவைத்தது நீதிமன்றம்.

மும்பையில் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந் சிங் மரண வழக்கு குறித்து தடயங்கள் ஆய்வு செய்யும் வல்லுனர்கள் குழுதான், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தடயங்களை ஆய்வு செய்ய உள்ளனர் என சிபிஐ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் வெளியாகியுள்ளது. 
 
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை உயர்நீதி மன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து எடுத்து கொண்ட வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது விசாரணையின்போது  சிபிஐ தரப்பில் இரண்டாவது இடைக்கால நிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது.
 
சிபிஐ அறிக்கையில் மத்திய தடயவியல் துறை வல்லுநர்கள் தந்தை மகன் இறப்பு குறித்த தடயங்களை ஆய்வு செய்து வருகின்றது. இவர்கள் தான் நடிகர் சுஷாந் சிங் சம்பந்தமான இறப்பு குறித்த தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த குழு தான் சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு சம்பந்தமான வழக்கை விசாரிக்க உள்ளனர் என சிபிஐ தரப்பில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை செப்டம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.