சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

இந்த நோட்டீஸை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், `கடைசியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துவரி செலுத்தியதாகவும், சொத்து வரிகளை வழக்கமாக செலுத்தப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டிருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரையிலான சொத்து வரி செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதையடுத்து ரூ.6.50 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டி உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் ராகவேந்திரா மண்டபத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா, ``நோட்டீஸ் அனுப்பப்பட்டு 10 நாட்களில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள். ஏன் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள். அத்துடன் இதற்கு மேலும் இப்படி நடந்து கொண்டால் அபராதம் விதிக்க நேரிடும்" என்றும்  எச்சரிக்கை விடுத்தார்.  இதனையடுத்து ரஜினிகாந்த் தரப்பில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ரஜினிகாந்த் தரப்பு மனுவை திரும்ப பெறுவதாக ஒப்புக்கொண்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதையடுத்து ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம்.  #அனுபவமே_பாடம்" என பதிவிட்டார். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் `#அனுபவமே_பாடம்'  என்ற அந்த ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் செஞ்ச தப்பை உணர்ந்து கொள்ளும் நீ தான் தலைவா மாஸ் என்றும், மக்களுக்காக ரூ.50 கோடி மதிப்புள்ள மண்டபத்தை கொடுத்த சூப்பர் ஸ்டாரை, மக்களுக்காக ஒரு காசு கூட கொடுக்காதவர்கள் எல்லாம் விமர்சிக்கிறார்கள் என்றும் விதவிதமாக பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் தான் அளித்த மனுவை திரும்ப பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறினார். ஆகவே வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும்படி நீதிபதியும் உத்தரவிட்டார். மேலும் நாளைக்குள் சொத்து வரியை செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சொத்து வரி மற்றும் அபராதத் தொகையுடன் சேர்த்து ரூ.6.56 லட்சத்தை ரஜினிகாந்த் செலுத்தியுள்ளார். இதனை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட தகவலில், 2020-21ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி சுமார் ரூ.6 லட்சம் மற்றும் தாமதமாக செலுத்துவதற்கான அபராதத் தொகை ரூ.9,386-யும் சேர்த்து காசோலையாக நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.