பழனி கோயிலுக்கு வந்த கேரள பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், அதிரடி திருப்பமாக, “அவர்கள் இருவரும் 
கணவன் - மனைவியே இல்லை” என்பது தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது பெண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அந்தப் பெண்ணிடம் “என்ன நடந்தது?” என்று விசாரித்த போது, கடந்த மாதம் 20 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு சென்ற போது, “என் கணவரை தாக்கிவிட்டு, என்னை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்” என்று, கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட மருத்துவர்கள், உடனடியாக அங்குள்ள கண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “பாதிக்கப்பட்ட அந்த 40 வயது பெண்ணும், அவரது கணவரும் கடந்த 19 ஆம் தேதி பழனி கோயிலுக்கு சென்று அங்கேயே தங்கி உள்ளனர். இதனையடுத்து, மறுநாள் 20 ஆம் தேதி அந்த பெண்ணின் கணவன், உணவு வாங்க சென்று வந்த போது, அங்கு வந்த 3 பேர், அந்த பெண்ணின் கணவனை கடுமையாகத் தாக்கிவிட்டு அந்த பெண்ணை கடத்திச் சென்று, அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அடைத்து வைத்து, பலவந்தமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கூட்டுப் பாலியல் பலாத்காரத்தைச் செய்ததில், அந்த தனியார் விடுதியின் மேலாளரும் ஒருவராக இருந்துள்ளார்” என்றும், அந்த பெண் கூறியுள்ளார்.

மிக முக்கியமாக, “என்னை கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி மிக கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், மர்ம உறுப்பில் பீர் பாட்டில்கள் கொண்டு தாக்கப்பட்டதாகவும்” அந்த பெண் குற்றம்சாட்டியதாகக் கூறப்பட்டது. 

இதனால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த பெண் சார்பில், அவரது கணவன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்சென்றபோது, போலீசார் இந்த புகார் மனுவை வாங்க மறுத்து, அனுப்பியதாகவும் அந்த பெண் கூறியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா வழக்குப் பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில், தமிழக போலீசாருக்கு பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்து உள்ளன.

இதனால், “கேரள பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டதன் பின்னணியில், பணம் பறிக்கும் கும்பல் உள்ளதா?” என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அத்துடன், கேரள போலீசில் தர்மராஜ் என்பவர் அளித்த புகாரில் “குறிப்பிட்ட சில இடங்களில் பழனி போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது, சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தின் சிசிடிவி காட்சிகளில் கணவன் - மனையான அவர்கள் இருவரும் நடமாடியதற்கான ஆதாரங்கள் இல்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும், பழனியில் வேறு இடங்களில் இருவரும் சுற்றி வந்ததுடன் மதுபானம் வாங்கியதற்கான சிசிடிவி ஆதாரமும்” போலீசாருக்கு கிடைத்து உள்ளது.

குறிப்பாக, “கேரள பெண்ணும் போலீசில் புகார் அளித்த தர்மராஜும் தாய் - மகன் என்று கூறி அறை வாடகை எடுத்து தங்கியதாக, விடுதி உரிமையாளர் முத்து தகவல் அளித்து உள்ளார் என்றும், தங்கும் விடுதியில் குடிபோதையில் தகராறு செய்ததால் இருவரையும் வெளியேற்றியதாக விடுதி உரிமையாளர் விளக்கம்’ அளித்து உள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மிக முக்கியமாக, “பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும், அவருடன் வந்த நபரும் கணவன் - மனைவியே இல்லை” என்றும்,  போலீசார் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. 

அதே போல், பாலியல் சம்பவம் பழனியில் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணை பரிசோதனை செய்த கேரளா மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கையில், “கூட்டுப் பலாத்காரம் செய்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை” என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனால், தமிழக போலீசார், அந்த பெண் தரும் தகவலுக்கும், இந்த வழக்கில் கிடைக்கும் தகவலுக்கும் நேர் எதிராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தற்போது தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

இதனால், தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண் மற்றும் இந்த விவகாரத்தில் புகார் அளித்த தர்மராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்த விரைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.