கொரோனா பரவல் விஷயத்தில், பரிசோதனை செய்வது மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. எந்த நாடு அதிக பரிசோதனை செய்கிறது என்பதி போட்டியேவும் நிகழ்கிறது. அதிக சோதனைகள் செய்யப்படும் நாடுகளுக்கான பட்டியலில், இப்போதைக்கு முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவதில் இந்தியாவும் இருந்து வருகிறது. 

சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி கூறும் போது, ``அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் 4.2 கோடிக்கும் அதிகமாகச் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் தான் இவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில், இந்தியா உள்ளது. இந்தியாவில் 1.2 கோடி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனையில் நாங்கள் உலக அளவில் முன்னணியில் உள்ளோம்” என்று கூறியிருந்தார்.

``பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதால் தான் பாதிப்பு எண்ணிக்கை கூடுகிறது" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். பிற எந்த நாடும், அமெரிக்கா அளவுக்கு கொரோனா  பரிசோதனை செய்யவில்லை என்று பெருமைப்பட்டுக் கொண்டும் இருக்கிறார் ட்ரம்ப்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழகத்தில்தான் அதிகப் பரிசோதனைகள் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்துவரும் 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

அந்தவகையில், இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று 65150 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதில் புதிதாக 6785 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கிவிட்டது எனக்கூறி பலரும் பயந்தாலும்கூட, பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதால் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன எனக்கூறி சமாதானம் செய்கிறார்கள் மருத்துவர்கள்.

இதுவொரு பக்கம் இருக்க, கொரோனா பரிசோதனையின் முடிவுகளைச் சம்பந்தப்பட்ட மக்களுக்குத் தெரிவிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன. அந்தவகையில், இன்றைய தினம் சிவகாசியில் ஆகாஷ் - பிரகாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இருவருக்கு இடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் மருத்துவர்கள். இந்தக் குழப்பத்தின் விளைவாக, தனக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா எனத் தெரியாமல் இருவரின் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியிலும் - ஒருவர் கொரோனா வார்டிலும் 5 மணி நேரமாக இருந்த அவலம் நடந்தேறியுள்ளது.

உள்ளே அட்மிட் ஆன நபர், ஆகாஷ். ஆனால் தொற்று உறுதியாகியிருந்தது, பிரகாஷூக்கு. பிரகாஷூக்கு பதிலாக மருத்துவர் குழு ஆகாஷூக்கு ஃபோன் செய்து அழைத்ததால், அவர் தனக்குத்தான் கொரோனாவென நினைத்து, தன்னுடன் பரிசோதனை மேற்கொண்ட தன் மனைவியையும் கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அட்மிட்டும் ஆகியிருக்கிறார்கள். கொரோனா வார்ட்டில் பணியிலிருந்தவரிடம், பெயர்ப் பலகை இல்லாததால், அவரும் அட்மிஷன் போட்டுக்கொண்டிருக்கிறார்.

அன்று இரவு மீண்டும் ஆகாஷின் மனைவிக்கு ஃபோன் வந்துள்ளது. இம்முறைப் பெயரைச் சரியாக அணுகியிருக்கிறது மருத்துவர் குழு. இதைத்தொடர்ந்து, ஆகாஷின் மனைவி, நாங்கள் ஏற்கெனவே இங்குதான் உள்ளோம் எனச் சொல்லவே, விவரம் அறிந்து, உடனடியாக அங்கிருந்து ஆகாஷ் மற்றும் அவர் மனைவியை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். பிரகாஷையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அட்மிட் செய்திருக்கின்றனர்.

இடைப்பட்ட நேரத்தில் மருத்துவமனையிலிருந்ததால் ஆகாஷ் மற்றும் அவர் மனைவி இப்போதைக்கு வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தினர் சிலரின் பார்வைக்குச் சென்றுள்ளது.

இனியொருமுறை இப்படியெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும் என்ற  கோரிக்கையை அவர்களிடத்தில் வைக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

- பெ.மதலை ஆரோன்