சத்தீஷ்காரில் காதலன் குடும்பத்தால், காதலி உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான சரஸ்வதி சொன்வானி, லல்லு சட்னாமி என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார்.

Chhattisgarh woman in love killed by family

இந்த காதல் குறித்து, லல்லு தனது வீட்டாரிடம் கூறியுள்ளார். அவர்கள், அந்த பெண்ணை தங்கள் வீட்டிற்கு அழைத்து வரும்படி கூறியுள்ளனர். 

இதனால், கடந்த 18 ஆம் தேதி லல்லு, காதலி சரஸ்வதியைத் தனது வீட்டுக்கு வருமாறு  அழைத்துள்ளார். அதன்படி சரஸ்வதியும், காதலன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

சரஸ்வதி காதலன் வீட்டிற்குச் சென்றபோது, காதலன் லல்லு வீட்டில் இல்லை. ஆனால், லல்லுவின் தாயார் மற்றும் அண்ணி ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் சரஸ்வதியை வரவேற்ற அவர்கள், நன்றாகப் பேசுவதுபோல் பேச்சுக் கொடுத்து, திடீரென்று சரஸ்வதியைக் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதனையடுத்து, சரஸ்வதி மீது மண்ணெணையை ஊற்றி, தீ வைத்துள்ளனர்.

இதில், தீ கொழுந்துவிட்ட எரிந்த நிலையில், அவர் அலறித்துடிக்கவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Chhattisgarh woman in love killed by family

சரஸ்வதிக்கு 80 சதவீதம் அளவுக்கு தீ காயங்கள் எரிந்துள்ள நிலையில், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள லல்லுவின் பெற்றோர் மற்றும் அண்ணியைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, காதலன் குடும்பத்தால் காதலி உயிருடன் எரிக்கப்பட்ட கொடூர சம்பவம், ராய்ப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.