சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட அன்றே அவர்கள் இருவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் இந்த கொடுஞ் செயலுக்கு பெரும்பாலான இந்திய பிரபலங்கள் முதல் சாமானிய மனிதர்கள் வரை தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

இது குறித்து, மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கை விசாரித்தது. இந்த விவகாரம் தொடர்பாகச் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களைத் தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இமெயில் மூலம் புகார் அளித்த நிலையில், சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு எடுத்து வழக்குப் பதிவு செய்தது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக சாத்தான்குளம் லாக்கப் டெத் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ. ரகு கணேஷ், பால்துரை தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 போலீசார் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த 5 போலீசாரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும், அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாறியது. இதனையடுத்து, மேலும் 5 போலீசார் என மொத்தம் 10 போலீசார் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பால் துரைக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. 

இதனையடுத்து, கொரோனா பாதிப்பு காரணமாக சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று, அவரது மனைவி மங்கயர் திலகம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். 

இந்நிலையில், பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. சிறைக் கைதி சிகிச்சையின் போது பலியானதால் இன்று நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்படும் என்றும், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, சாத்தான் குளத்தில் தந்தை - மகன் போலீசார் விசாரணையில் தாக்கப்பட்டு, சிறைக் கைதிகளாக இருக்கும் போதே உயிரிழந்ததைப் போலவே, அதே வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ. பால்துரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.