புதுவையில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவமும், மயிலாடுதுறையில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட சம்பவமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த பகுதியில் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார். 

இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவர், அந்த பகுதியில் இருக்கும் மளிகைக் கடைக்கு பொருட்கள் வாங்க வந்துகொண்டு இருந்து உள்ளார். அப்போது, அந்த பெயிண்டர் அந்த சிறுமியின் பின்னாடி வந்து சிறுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, தோளில் கிள்ளி ஆபாசமான செயலில் ஈடுபட்டு உள்ளார். இதனால், பயந்துபோன அந்த சிறுமி, அலறித்துடித்து உள்ளார்.

இதனைப் பார்த்த அங்குள்ள மளிகைக் கடைக்காரர், அந்த இளைஞனைக் கண்டித்து எச்சரித்து அனுப்பி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்ற அந்த இளைஞர், அங்கேயே காத்திருந்து உள்ளான். 

அப்போது, மாலை நேரத்தில் அந்த சிறுமி தன்னுடைய வீட்டின் வாசலில் கூட்டிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, சிறுமியின் பின் புறம் மீண்டும் வந்து நின்ற அந்த இளைஞன், சிறுமியை பார்த்து கண் ஜாடை காட்டி அழைத்து உள்ளான். ஆனால், சிறுமி அவனை பார்த்தும் பார்க்காதது போல், தன்னுடைய வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். ஆனால், அவனோ விடாமல் சிறுமிக்கு கண் ஜாடை காட்டிக்கொண்டே இருந்து உள்ளான். இதனை சிறுமியின் பெற்றோரும் பார்த்து அதிர்ச்சியடைந்து அதன் பிறகு, அந்த இளைஞரைக் கண்டித்து விரட்டி உள்ளனர்.

இதனையடுத்து, சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த அந்த இளைஞன், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து, பலாத்காரம் செய்ய முயன்று உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த சிறுமி, அவனிடமிருந்து விடுபடப் போராடி உள்ளார். அத்துடன், அந்த போராட்டத்தில் பயந்து போன அந்த சிறுமி, பயத்தில் சத்தம் போட்டு அலறி துடித்து உள்ளார். சிறுமி சத்தம் போடவே, பயந்துபோன அந்த இளைஞன், சிறுமியின் வீட்டின் கொல்லைப்புற வாசல் வழியாகத் தப்பி வெளியே ஓடி உள்ளான். 

சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்த பிறகு, தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த இளைஞன் மீது புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார. அந்த பெயிண்டர் வேலை பார்க்கும் இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, போலீசார் அவனை சிறையில் அடைத்தனர். 

குறிப்பாக, கைதான அந்த இளைஞருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், புதுச்சேரி அரியாங்கும்பம் வீராம்பட்டிணத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே பகுதியைச் சேர்த்த 27 வயதான கலைவாணன் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிய வந்த நிலையில் கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் பின்னர் காவல் துறையில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கலைவாணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், அவருக்கு கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.