நேற்றைய தினம், விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே பண்ணை மசோதா, விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகுவார் என சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.

விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் பதவி விலகல் குறித்த அறிவிப்பு அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. விவசாயிகள் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் பதவி விலகுவார் என கூட்டணியில் உள்ள அரோமணி அகாலி தளம் அறிவித்துள்ளது.

இவர், மத்திய அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இவர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக கூறி அவர் தனது அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். 

இவரது ராஜினாமாவுக்கு காரணமான மசோதக்களில் முதலாவதான விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) மசோதா, அதிகார்பூர்வ விவசாய மார்க்கெட்கள், மண்டிகளுக்கு வெளியிலும் விவசாய பொருட்களை விற்க உதவும் மசோதா. குறிப்பிட்ட இடத்தில்தான் விவசாய பொருட்களை வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நிலை போய், இனி எங்கும் வேண்டுமானாலும் இதை வர்த்தகம் செய்யலாம். அதேபோல் வெளியில் இப்படி செய்யப்படும் வர்த்தகத்திற்கு மார்க்கெட் வரி உள்ளிட்ட வரிகளை மாநில அரசுகள் பெற முடியாது. அதேபோல் இப்படி பொருட்களை விற்பனை செய்ய உரிய அனுமதி பெற வேண்டியது இல்லை. ஆனால் இப்படி நடந்தால், இதன் காரணமாக விவசாய துறையில் தனியார் நுழைய வாய்ப்புள்ளது. விவசாய பொருள் விற்பனையில் தனியார் வர வாய்ப்புள்ளது. தங்களுக்கு போதிய வருமானம் வராது என்று விவசாயிகள் கூறுகிறார்கள். அதேபோல் இதனால் மாநிலங்களுக்கு செல்லும் வரியும் பறிபோகும் என்று மாநில கட்சிகள் கூறியுள்ளது. 

அடுத்த மசோதாவான, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் மசோதாவில், பண்ணை பொருட்களை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும், அதை வாங்குவதையும் ஒழுங்குபடுத்த இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று அரசு கூறியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து அதன் மூலம் தங்கள் பண்ணை பொருட்களை விற்பனை செய்ய முடியும். ஆனால் இந்த மசோதாவில் பண்ணை பொருட்களுக்கு விலை நிர்ணயம் என்ன என்று அறிவிக்கப்படவில்லை. இதனால் தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் பண்ணை பொருட்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. 

அடுத்தது, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020. இந்த திருத்த மசோதா மொத்தமாக அத்தியாவசிய பொருட்களின் சந்தையை மாற்ற போகிறது. இதன் மூலம் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்தே நீக்கப்படுகிறது. இதனால் இந்த உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இனிமேல் எந்த கட்டுப்பாடும் இருக்காது. இது நிறைவேற்றப்படுவதால், இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. இவர்களால் சரியான விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியும். தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயம் மொத்தமாக வீழ்ச்சி அடையும் என்று விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்து உள்ளனர். 

இந்த மசோதாவிற்கு எதிராக ஹரியானா, பஞ்சாப்பில் விவசாயிகள் பலர் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஒரு வாரதத்திற்கும் மேலாக அங்கு விவசாயிகள் தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடுமையான போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இந்த மசோதாக்கள் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில்தான் இன்று மத்திய அமைச்சர் ராஜினாமா செய்யவிருப்பதாக கூறியிருக்கிறார்.

தமிழகத்தை பொறுத்தவரையில், ஆளுங்கட்சியினர் இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ``மத்திய அரசு விவசாயத் துறை மார்க்கெட்டிங் தொடர்பாக வெளியிட்டுள்ள 3 அவசர சட்டங்களுக்கு பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் கடுமையாக எதிர்த்து, அதன் மத்திய அமைச்சரே பதவியை ராஜினாமா செய்திருக்கிறாரோ, விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் அந்தச் சட்டங்களுக்கு,  மகிழ்ச்சியுடன் ஆதரவளிக்கிறது பழனிசாமி அரசு" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.