காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த 16 வயது சிறுமியிடம், “எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்றால், முதலில் நீ நடனமாட வேண்டும்” என்று, காவல்  ஆய்வாளர் கண்டிஷன் போட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தான், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் தபேலி பகுதியில் அமைந்துள்ள கோவிந்த நகரை சேர்ந்த 16 வயது சிறுமி, தன் குடும்பத்தினருடன் அங்கு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சிறுமியின் குடும்பத்தினர், அப்பகுதியில் உள்ள கோயில் விசேசங்களில் பஜனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி வசித்து வரும் வீட்டின் உரிமையாளரின் மருமகன் அனுப் யாதவ் என்னும் இளைஞர், சிறுமியை வீட்டை உடனே காலிப் பண்ணச் சொல்லி கடந்த சில வாரங்களாக தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, எங்கு செல்வது என்று தெரியாமல், கொரோனா காலம் முடிந்த பிறகு வீட்டை காலி செய்வதாக அவர்கள் கூறியதாகத் தெரிகிறது.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அவர், சிறுமிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. அத்துடன், சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து ரகளை செய்து வந்ததாகத் தெரிகிறது.

மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த 16 வயது சிறுமி மார்க்கெட் சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டின் உரிமையாளரின் மருமகன் அனுப் யாதவ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால், அவனிடமிருந்து போராடி அங்கிருந்து ஓடி வந்துள்ளார். மேலும், இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சிறுமி, தனி ஆளாக அங்கிருந்து நேராகக் கோவிந்த நகர் காவல் நிலையத்திற்குச் சென்று, வீட்டின் உரிமையாளரின் மருமகன் அனுப் யாதவ் மீது புகார் அளித்துள்ளார்.

காவல் நிலையத்தில் சிறுமியின் புகார் மனுவை விசாரித்த காவல் ஆய்வாளர் அனுராப் மிஷ்ரா, “எப்.ஐ.ஆர். போட வேண்டும் என்றால், என் முன்னால் நீ நடனமாட வேண்டும்” என்று, கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது. 

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, வேறு வழியின்றி காவல் ஆய்வாளர் முன்பு நடனமாடியதாகவும் தெரிகிறது. இதனை அங்கு இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த வீடியோவை யாரோ சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், கடும் கண்டனங்களையும் எழுப்பியது. இந்த வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்துப் பேசிய சிறுமியின் தாய், “விசாரணை என்ற பெயரில், தன் மகளை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி நடனமாட வைத்துள்ளனர்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், இது தொடர்பாக விளக்கம் அளித்த கோவிந்த காவல் நிலையம் வட்ட ஆய்வாளர் விகாஸ் குமார் பாண்டே பேசும்போது, “சிறுமியின் குடும்பத்தினருக்கும், வீட்டு உரிமையாளருக்கு இடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளது என்றும், அந்த குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

“இதனால், காவல் துறைக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த வீடியோவை படம் பிடித்து வைரலாக்கி உள்ளனர் என்றும், இருப்பினும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றும், அவர் விளக்கம் அளித்தார். 

எனினும், “சிறுமி தனி ஆளாக காவல் நிலையம் வந்த நிலையில், அவர் நடனமாடியதை அவரே வீடியோ எடுத்தாரா? என்ற கேள்வியும்” எழுந்துள்ளது.

இதனிடையே, காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வதற்காக, காவல் ஆய்வாளரே சிறுமியை கட்டாயப்படுத்தி நடனமாடச் செய்த சம்பவம், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.