கடந்த 2015-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாபநாசம். த்ரிஷயம் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில் கமல்ஹாசன், கவுதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து அசத்தியிருப்பார். ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்த படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் ரோஷன் பஷீருக்கு திருமணம் நடைபெற்றது. 

இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த பர்ஸானாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்தது. ஃபர்ஸானா, பிரபல நடிகர் மம்மூட்டியின் உறவினர். சட்டம் படித்துள்ளார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 5 ஆம் தேதி கேரளாவில் நடந்தது. இதில் இரு வீட்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இவர்கள் திருமணம் எளிமையாக நேற்று நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் ரோஷன் பஷீர் இன்று வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ரோஷன் பஷீருக்கு மக்கள் மத்தியில் சிறந்த அங்கீகாரம் கிடைத்த படம் பைரவா. தளபதி விஜய் நடித்த இந்த படத்தை பரதன் இயக்கியிருந்தார். கீர்த்தி சுரேஷ், சதீஷ், YG மஹேந்திரன் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். மலையாளத்தில் பிளஸ் டூ, ரெட் ஒயின், டூரிஸ்ட் ஹோம் உள்பட பல படங்களில் நடித்துள்ள ரோஷன் பஷீர், தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கவுள்ளார். ரசிகர்களை தொடர்ந்து நடிகர் ரோஷன் பஷீருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.