சென்னை மாநகரம் தோற்றுவிக்கப்பட்ட தினம் சென்னை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம், ஆகஸ்ட் 22, 381 ஆம் ஆண்டு சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், ``வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை!" என பதிவிட்டார்.

சென்னை தினக் கொண்டாட்டத்துக்கு இடையே, முதல்வர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிலும் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு நேற்றய தினம் இது குறித்து வாழ்த்து பதிவிட்ட முதல்வர் ``சங்கடங்கள், தடைகளை நீக்கவல்ல முழுமுதற் கடவுள் விநாயகரை வணங்கி, அவர் திருவடி சரண் அடைபவர்களுக்கு, நல்லசொல்வளம், பொருள்வளம், உடல்நலம் ஆகிய அனைத்து வளங்களும் உண்டாகும். கேட்கும் வரத்தை கொடுக்கும் கடவுளானவேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிகிடைக்கட்டும். அன்பு, அமைதிநிலவி, நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும். இல்லம்தோறும் இன்பம், மகிழ்ச்சி பொங்கட்டும்" என்று கூறியிருந்தார். 

மேலும் இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி சனிக்கிழமை சேலம் திருவகவுண்டனூர் இல்லத்தில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து முதல்வர் வழிபட்டிருக்கிறார்.

சேலம் திருவகவுண்டனூர் இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டி, தோப்புக்கரணம் போட்டு குடும்பத்தினருடன் முதல்வர் பழனிசாமி வழிபட்டார். 

பூஜையின் போது முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை பின்பற்றிம் வழிபட்டனர். 

கடந்த சில தினங்களாகவே தொடர் சுற்றுப்பயணத்தில் இருந்து வரும் முதல்வர், இன்று அவர் இல்லத்துக்கு சென்று இந்த வழிபாடுகளை நடத்தியிருக்கிறார்.

இந்நிலையில் வாணியம்பாடியில் முதல்வர் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்தும், வளர்ச்சிப்பணிகள் மற்றும் முடிவுற்றுப்பணிகளை தொடங்கி வைக்க முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் (ஆக.20) வேலூர் மாவட்டத்துக்கு வந்தார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி அதன் பிறகு தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கார் மூலம் புறப்பட்டார்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக முதல்வர் பழனிசாமி சென்றார். வாணியம்பாடி எல்லையில் உள்ள இஸ்லாமியா கல்லூரி எதிரே தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தலைமையில், வாணியம்பாடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், அதிமுக நகரச்செயலாளர் சதாசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், வருவாய்த் துறையினர் என பலர் முதல்வரை வரவேற்க காத்திருந்தனர்.

வாணியம்பாடி எல்லைக்குள் முதல்வர் பழனிசாமியின் கார் வந்ததும், அதிமுகவினர் காத்திருப்பதை அறிந்த முதல்வர் பழனிசாமி தனது ஓட்டுநரிடம் காரை நிறுத்துமாறு கூறினார். பிறகு, காரை விட்டு கீழே இறங்கிய முதல்வருக்கு அமைச்சர் நிலோபர் கபீல் உட்பட பலர் சால்வை வழங்கி, பூங்கொத்து வழங்கினர். அங்கு கூடியிருந்த அதிமுக கட்சியினர், பொதுமக்கள் என பலர் முதல்வருக்கு கைகொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதிமுகவினர் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் அதன்பிறகு தருமபுரி நோக்கி புறப்பட்டார்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாணியம்பாடி வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் 2 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து முதல்வரின் உடல்நலத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.