கோவிட் - 19 கொரோனா வைரஸ், சளி - இருமல் - நெருங்கி நின்று பேசுதல் மூலம் வெளிவரும் நீர்த்துளிகள் வழியாகத்தான் பரவும் என்பதுதான், இதுவரையிலான கணிப்பாக இருந்துவந்தது. அதனால்தான், மாஸ்க் அணியவேண்டும் - பேசும்போது 6 மீட்டர் இடைவெளி வேண்டும் - தனித்திரு, விலகியிரு என்று சொல்லப்பட்டது. 

ஆனால், இப்போது கொரோனா காற்றில் பரவும் வைரஸ் என்பது தெரியவந்துள்ளது. உலகளவில், 32 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த, 239 ஆய்வாளர்கள் ஒன்றுசேர்ந்து இதை தெரிவித்துள்ளனர். கொரோனா காற்றிலேயேவும் பரவுகிறது என்பதற்கு, தங்களிடம் ஆதாரமிருப்பதாகவும், அதை கணக்கில்கொண்டு உலக சுகாதார நிறுவனம் உடனடியாக நோய்ப்பரவுதல் குறித்த தனது மறுஅறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளனர். இவர்கள் அனைவரும், தங்களின் ஆதாரங்களை அடுத்த வாரத்தில் அறிவியல் தளமொன்றில் வெளியிடப் போவதாக, நியூ யார்க் டைம்ஸ் என்ற பத்திரிகையின் வழியாக தெரிவித்துள்ளனர். 

இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்போது, தொற்றுநோயியல் துறையின் மருத்துவர் பெண்டேட்டா இதற்கு பதிலளித்துள்ளார். அவர் சொல்லும்போது, ``கடந்த இரண்டு மாதங்களாக நாங்களும் இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம். உறுதியான, தீர்க்கமான முடிவுகள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால்தான், நாங்கள் மேற்கொண்டு அதுபற்றி தெரிவிக்கவில்லை" என்றுகூறியுள்ளார்.

இதற்கிடையில் காற்றின் மூலமாக இது எப்படி பரவும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அறிவியலாளர்கள் பேசும்போது, ``ஒருவரின் உடலிலிருந்து இந்த கொரோனா, நீர்த்துளிகள் வழியாகத்தான் வெளிவருகிறது. வெளிவந்தபின், நீர்த்துளியிலிருந்து பிரிந்து காற்றில் கலக்கிறது. இந்தக் காற்றை ஒருவர் சுவாசிக்கும்போது, அவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது" என்று கூறியுள்ளனர்.

இந்த ஆதாரங்களை, அறிவியல் தளத்தில் அவர்கள் வெளியிட்டப்பிறகு, உலக சுகாதார நிறுவனம் இவற்றை கணக்கில் கொள்ளும் என எதிர்ப்பார்க்கிறார்கள் அவர்கள்.

இருந்தாலும், உலக சுகாதார நிறுவனம் விரைந்து செயல்பட வேண்டும் என்பது அறிவியலாளர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி, ஏறத்தாழ ஒன்றரை மாத காலத்துக்குப் பிறகே உலக சுகாதார நிறுவனம் இதை தொற்றுநோய் என அறிவித்தது. தாமதமான இந்த அறிக்கைதான், சீனாவிலும் சீனாவுக்கு வெளியிலும் நோய் தீவிரமாக பரவியதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல இப்போது, இது காற்றில் பரவும் தொற்றுநோய் என்பதையும் தாமதித்து சொன்னால் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சுகிறார்கள் அவர்கள்.

ஒருவேளை கொரோனா காற்றில் பரவும் நோய்ப்பாதிப்பு என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டால், என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம்? என மருத்துவர்களிடம் விசாரித்தபோது,

* வரும் காலங்களில் நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேவும் மாஸ்க் அணியும் நிலை வரலாம். குறைந்த விலை மாஸ்க், வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படலாம். 

குறிப்பாக முதல் நிலை பணியாளர்களுக்கு, என் 95 மாஸ்க் அணியவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படலாம். 

* பள்ளி, கல்லூரி தொடங்கி மருத்துவமனைகள் வரை கூட்டம் நிறைந்த, மூடியிருக்கும் இடங்கள் அனைத்திலும் வெண்டிலேட்டர் சிஸ்டம் வைத்து காற்று வெளியேற்ற வேண்டிய நிலை வரலாம். 

* அறைகளின் கதவுகளிலும் வைரஸ் ஒட்டியிருக்கலாம் என்பதால், பொது இடங்களிலிருக்கும் கைப்பிடிகளில் அல்ட்ராவைலட் கதிர்கள் மூலம் அவற்றை சுத்தப்படுத்தும் நிலை ஏற்படலாம். 

இத்தனை ரிஸ்க் இருப்பதால், உலக சுகாதார நிறுவனம் தனது நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என மருத்துவர் தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுவருகின்றன.
 

- ஜெ.நிவேதா.