கோவிட் - 19 கொரோனா வைரஸ், எங்கிருந்து தொடங்கியது என்பதுதான், இன்றைக்கு அறிவியலாளர்களின் மிகப்பெரிய தேடலாக இருந்து வருகிறது. தொடக்க காலத்தில், இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்துதான் பரவுகிறது என சொல்லி வந்தனர் சில ஆய்வாளர்கள். பின் சில காலங்களுக்கு வௌவாலில் இருந்துதான் இது பரவுகிறது என்றார்கள், பின் சீனர்கள் உட்கொள்ளும் ஏதோவொரு அசைவ உணவென்றார்கள். இப்படி தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்த சூழ்நிலையில், அறிவியலாளர்கள் சிலர் இந்த வைரஸ் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என சொல்லத்தொடங்கினர். 

இதைக் குறிப்பிடும் வகையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது பேட்டியொன்றில் சீனா இந்த வைரஸை செயற்கையாக உருவாக்கிவிட்டது என்று கூறியிருந்தார். கொரோனா பரவத்தொடங்கிய முதல் சில மாதங்களுக்கு, ட்ரம்ப் இதை `சீனா வைரஸ்' என்றுதான் பெயரே சொல்லுவார். கொரோனா என்ற வார்த்தையை, மறந்தும் பயன்படுத்திவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். சீனாவின் மீது தொடர் குற்றச்சாட்டை வைத்த அவர், சீனாவின் இந்தச் செயலுக்கு, உலக சுகாதார நிறுவனமும் உடந்தை எனக்கூறிய ட்ரம்ப், இருவரும் இணைந்து உலகம் முழுக்க இந்த வைரஸை பரவ செய்து விட்டதாக சொல்லியிருந்தார். 

உலக சுகாதார நிறுவனம் இந்தக் கருத்தை முற்றிலுமாக மறுத்து, கோவிட் - 19 கொரோனா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதில்லை எனக்கூறி விளக்கியது.

ஆனால் இப்போது இந்த வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் மறுபடியும் வலுக்கத் தொடங்கியுள்ளது. இதன் பின்னணி விவரங்கள், இங்கே...

ஏழு வருடங்களுக்கு முன்பு, சீனாவின் வூஹான் வைராலஜி துறைக்கு, இப்போதுள்ள கோவிட் - 19 வைரஸின் சாம்பிளை போன்றதொரு சாம்பிள், அனுப்பி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஏழு வருடங்களுக்கு முன்பு, ஆய்வொன்றுக்காக அனுப்பப்பட்ட அந்த வைரஸ்தான், இப்போது கவனக்குறைவாலோ/திட்டமிட்டோ ஆய்வகத்திலிருந்து பரவி, காற்றில் பரவும்போது தன்மையை மாற்றிக்கொண்டதோ என்று சந்தேகிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.

2013 - ம் ஆண்டில், சீனாவின் வூஹான் பகுதிக்கு வௌவால்களிடம் இருந்து ஆய்வுக்காக பெறப்பட்ட ஒரு வைரஸ் அது. சார்ஸோடு ஒத்துப்போகும் இந்த வைரஸ் இப்போது கொரோனா நோய்வாய்ப்பட்டிருந்தவர்களின் உடலில் இருந்த வைரஸோடு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதில், இரண்டும் ஒத்துப்போவது உறுதிசெய்யவும்பட்டுள்ளது. 

ஆகவே, ஆய்வகத்தில் இருந்ததுதான் பரவியிருக்கும் என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது. சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகையில் இந்த செய்தியை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

வூஹானுக்கு சாம்பிளாக அளிக்கப்பட்ட அந்த வைரஸை வௌவாலிடமிருந்து எடுத்துத் தந்தவர், ஷி சென்காலி என்பவர், தான் கொடுத்த அந்த வைரஸ் சாம்பிள், இப்போதுள்ள இந்த கோவிட் - 19 வைரஸோடு  96.2 % ஒத்துப்போயிருந்ததாக கூறியிருக்கிறார். இவரும், வூஹாணின் வைராலஜி துறையின் ஆய்வாளர்களுள் ஒருவர். 

இந்த நிகழ்வு குறித்து சர்ச்சை, புதிதல்ல என்றே சொல்ல வேண்டும். 2020 ல், மே மாதமே மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியது. அப்போது பேசியிருந்த வூஹான் வைராலஜி துறையினர், ஷி கலெக்ட் செய்து கொடுத்த அந்த வைரஸின் மீதமுள்ள சாம்பிள் தங்களிடம் மீதம் இல்லையென கூறியிருந்தனர். சாம்பிள் மீதமே இல்லையெனும்போது, எங்களிடம்மிருந்து அது எப்படி கசியும் என கேள்வி எழுப்பியிருந்தார்கள் அவர்கள். 

ஆனால் இப்போது சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகையினர், இரண்டு வைரஸையும் ஒப்பீடு செய்த ஆய்வாளரொருவரின் பேட்டியோடு வெளியிட்டுள்ளனர். அதனால்தான் விஷயம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

கொரோனா பரவலின் தொடக்கத்தின்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாதான் வைரஸை பரப்பியது எனக்கூறிவந்தார். அப்போது அவர், தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சொல்லியிருந்தார். ஒருவேளை ட்ரம்ப் குறிப்பிட்ட ஆதாரம், இதுபற்றியதுதானா என கேள்வி எழுப்புகிறார்கள் சிலர்.

இன்னொரு பக்கம், ஆய்வகத்திலிருந்து பரவியிருந்தது என்றாலும்கூட, கொள்ளைநோய்க்கான தன்மையோடு வீரியமாக பரவும் ஒரு வைரஸை மனிதர்களால் செயற்கையாக உருவாக்கவோ, பரப்பவோ இயலாது என்கிறார்கள் அறிவியலாளர்கள். அப்படி பார்த்தால், வைரஸை சீன அறிவியலாளர்கள் கவனக்குறைவாக பரவ விட்டிருக்கலாம், ஆனால் அது இவ்வளவு பெரிய வீரியம் எடுத்து பரவியிருப்பது, அதன் தன்மையை பொறுத்ததே என்றுதான் சொல்ல வேண்டும்.

மேற்கொண்டு உலக சுகாதார நிறுவனம் இதில் தலையிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.